கொரோனா தடுப்பு உபகரண கொள்முதல் மோசடி வழக்கில் முன்னாள் மேயரை கைது செய்ய 4 வாரம் தடை விதித்த ஐகோர்ட்டு - விசாரணைக்காக போலீசில் ஆஜராக உத்தரவு

கொரோனா தடுப்பு உபகரண கொள்முதல் மோசடி வழக்கில் முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேக்கரை 4 வாரம் கைது செய்ய தடை விதித்த ஐகோர்ட்டு, அவரை விசாரணைக்காக போலீசில் ஆஜராக உத்தரவிட்டது.

Update: 2023-09-06 18:45 GMT

மும்பை, 

கொரோனா தடுப்பு உபகரண கொள்முதல் மோசடி வழக்கில் முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேக்கரை 4 வாரம் கைது செய்ய தடை விதித்த ஐகோர்ட்டு, அவரை விசாரணைக்காக போலீசில் ஆஜராக உத்தரவிட்டது.

மோசடி

மும்பையில் கொரோனா காலத்தில் மாநகராட்சி சார்பில் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு பாடி பேக் (கவச உடைகள்), முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கியதில் பண முறைகேடு நடந்ததாக அப்போது மேயராக இருந்த கிஷோரி பெட்னேக்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதிகாரிகளுடன் முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேக்கர் உடந்தையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

ஐகோர்ட்டில் மனு

இதனால் அவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் கேட்டு மும்பை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் கடந்த 29-ந்தேதி மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து அவர் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

4 வாரம் இடைக்கால தடை

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.ஜே. ஜாம்தார் முன்னிலையில் நடந்தது. விசாரணையை தொடர்ந்து நீதிபதி, மனுதாரர் கிஷோரி பெட்னேக்கரை 4 வாரம் வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அதே நேரத்தில் வருகிற 11, 13, 16-ந் தேதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கிஷோரி பெட்னேக்கருக்கு நீதிபதி உத்தரவிட்டார். தற்போது விசாரணை விரைவாக நடந்து வருவதாகவும், இந்த கட்டத்தில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை, விசாரணையின் இறுதிகட்டத்தில் இது பற்றி பரிசீலிக்கலாம் என்றும் நீதிபதி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்