வீட்டு வேலைகளை கணவன், மனைவி சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்- ஐகோர்ட்டு கருத்து
தற்போதைய நவீன காலத்தில் வீட்டு வேலைகளை கணவர், மனைவி இருவரும் சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று மும்பை ஐகோர்ட்டு கூறியுள்ளது.;
மும்பை,
தற்போதைய நவீன காலத்தில் வீட்டு வேலைகளை கணவர், மனைவி இருவரும் சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று மும்பை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
மேல்முறையீடு
மும்பையை சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் மனைவியை பிரிந்து வாழ்கிறார். தனது 13 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்ள விவாகரத்து கேட்டு குடும்ப நலக் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் குடும்ப நலக்கோர்ட்டு அவரது மனுவை கடந்த 2018-ம் ஆண்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
மனுவில் அவர், "நான் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டேன். எனது மனைவி எப்போதும் அவரது தாயுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டே இருப்பார். அவர் வீட்டு வேலைகளை செய்வதில்லை" என்று கூறியிருந்தார்.
மனு தள்ளுபடி
இந்த மனுவை நீதிபதிகள் நிதின் சாம்ப்ரே மற்றும் ஷர்மிளா தேஷ்முக் ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரரின் மனைவி முன் வைத்த வாதத்தில், தான் அலுவலகத்தில் இருந்து திரும்பிய பிறகு அனைத்து வேலைகளையும் செய்ய கட்டாயப் படுத்தப்பட்டதாகவும், மேலும் தனது குடும்பத்துடன் தொடர்பில் இருந்ததற்காக குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் தனது கணவர் தன்னை பல சந்தர்ப்பங்களில் உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறினார். இரு தரப்பையும் விசாரித்த நீதிபதிகள், கணவர் தாக்கல் செய்த விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்தது. இது குறித்து நீதிபதிகள் தீர்ப்பில் கூறியதாவது:-
பிற்போக்கு மனநிலை
தற்போதைய நவீன காலத்தில் ஆணும், பெண்ணும் வேலைக்கு செல்லவேண்டி உள்ளது. இந்த நிலையில் வீட்டு வேலைகள் அனைத்தையும் மனைவியே செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிற்போக்கு மனநிலையை பிரதிபலிக்கிறது. நவீன சமுதாயத்தில் குடும்ப பொறுப்புகளின் சுமையை கணவர்- மனைவி இருவரும் சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும். வீட்டு பொறுப்புகளை பெண் மட்டுமே சுமக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் பழமையான மனநிலை மாற்றப்பட வேண்டும்.
திருமண உறவு மனைவியை பெற்றோரிடம் இருந்து தனிமைப்படுத்த வழிவகுக்க கூடாது. அவர்கள் தங்களது பெற்றோருடனான உறவை முறித்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. குடும்ப உறவில் ஒருவர் பெற்றோருடன் தொடர்பில் இருப்பதை கற்பனையிலும் மற்றொருவர் வேதனையாக கருதக் கூடாது. எங்கள் பார்வையில் பெற்றோருடனான தொடர்பை முறித்துக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்துவது, மனைவியை மனரீதியான கொடுமைக்கு உட்படுத்துகிறது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.