விவசாயிகளிடம் இருந்து 2 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை மத்திய அரசு கொள்முதல் செய்யும் - தேவேந்திர பட்னாவிஸ் தகவல்

குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 410-க்கு விவசாயிகளிடம் இருந்து 2 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை மத்திய அரசு கொள்முதல் செய்யும் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

Update: 2023-08-22 18:45 GMT

மும்பை, 

குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 410-க்கு விவசாயிகளிடம் இருந்து 2 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை மத்திய அரசு கொள்முதல் செய்யும் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

விவசாயிகள் போராட்டம்

விலை உயர்வை தடுக்கும் வகையில் வருகிற டிசம்பர் வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு 40 சதவீதம் வரி விதித்து உள்ளது. இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாசிக் மொத்த மார்க்கெட்களில் வியாபாரிகள் வெங்காய ஏலத்தை நிறுத்தி வைத்து உள்ளனர். விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு விதித்துள்ள 40 சதவீத வரியை திரும்ப பெற வேண்டும் என வியாபாரிகள், விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மத்திய அரசு கொள்முதல்

இந்தநிலையில் ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில், மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 410 விலையில் 2 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய உள்ளதாக துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். 5 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள அவர், எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- வெங்காயம் விவகாரம் தொடர்பாக நான் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, வணிகத்துறை மந்திரி பியூஷ் கோயல் ஆகியோரிடம் பேசினேன். குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 410 விலையில் மத்திய அரசு 2 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய உள்ளது. வெங்காய கொள்முதலுக்காக நாசிக், அகமதுநகரில் சிறப்பு கொள்முதல் மையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் வெங்காய விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்