பெண்ணை கற்பழித்து சாலையில் வீசி சென்ற கொடூரம்- 2 பேர் கைது; ஒருவருக்கு வலைவீச்சு

பண்டாராவில் பெண்ணை கற்பழித்து சாலையில் வீசி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.

Update: 2022-08-06 14:26 GMT

மும்பை, 

பண்டாராவில் பெண்ணை கற்பழித்து சாலையில் வீசி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.

பெண் கற்பழிப்பு

பண்டாரா மாவட்டம் கன்கால்மோக் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் சாலையோரம் மயங்கி நிலையில் பெண் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சென்ற போலீசார் உடலில் ஆடையின்றி கிடந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக நாக்பூர் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து நடந்த விசாரணையில் அவர் கற்பழிக்கப்பட்டு சாலையோரம் வீசப்பட்டது தெரியவந்தது. சம்பவத்தன்று 35 வயது பெண் பண்டாரா காமர்காவ் கிராமத்தில் உள்ள சகோதரனின் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது ஸ்ரீராம் என்பவர் பெண்ணிடம் நைசாக பேச்சு கொடுத்து அவரை சகோதரன் வீட்டில் விடுவதாக அழைத்து சென்றார். இதில் அவர் பெண்ணை பாலஸ்காவ் பகுதிக்கு அழைத்து சென்று கற்பழித்தார். பின்னர் அவர் பெண்ணை வனப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையோரம் விட்டு சென்றார். கடந்த 1-ந் தேதி பெண் கன்கல்மோக் பகுதிக்கு வந்தார். அப்போது அவரை லூக்கா அசோக், முகமது இஜாஸ் ஆகியோர் உதவி செய்வதாக ஏமாற்றி அழைத்து சென்று கற்பழித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் பெண்ணை சாலையோரம் வீசி சென்றது தெரியவந்து உள்ளது.

2 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லூக்கா அசோக், முகமது இஜாசை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஸ்ரீராமை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணை  இன்று நாக்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பா.ஜனதா பெண் தலைவர் சித்ரா வாக் சந்தித்து பேசினார். பின்னர் அவர் பண்டாரா கற்பழிப்பு வழக்கு விசாரணை சிறப்பு கோர்ட்டில் நடத்தப்பட்டு விரைவில் முடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கிடையே பண்டாரா கற்பழிப்பு வழக்கை பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் (எஸ்.ஐ.டி.) விசாரிக்க முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்