தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள 3 வலுவான கட்சிகள் இ.டி., ஐ.டி., சி.பி.ஐ. மட்டுமே - உத்தவ் தாக்கரே விமர்சனம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள 3 வலுவான கட்சிகள் இ.டி., ஐ.டி., மற்றும் சி.பி.ஐ. மட்டுமே என முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்தார்.
மும்பை,
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள 3 வலுவான கட்சிகள் இ.டி., ஐ.டி., மற்றும் சி.பி.ஐ. மட்டுமே என முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்தார்.
சிறப்பு பேட்டி
உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயிடம் அந்த கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.யும், கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா'வின் நிர்வாக ஆசிரியருமான சஞ்சய் ராவத் பேட்டி கண்டார். அந்த சிறப்பு பேட்டியின் ஒரு பகுதி நேற்று 'சாம்னா'வில் வெளியானது. அதில் உத்தவ் தாக்கரே கூறியிருப்பதாவது:-
3 வலுவான கட்சிகள்
தேர்தல் வரும்போது மட்டுமே கூட்டணி கட்சிகளை பா.ஜனதா அணுகும். அந்த தருணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என்று சொல்வார்கள். தேர்தல் முடிந்த பிறகு அது மோடி அரசாக மாறி விடும். பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 36 கட்சிகள் உள்ளன. ஆனால் அந்த கூட்டணியில் மூன்று தான் வலுவான கட்சிகள். அவை இ.டி. (அமலாக்கத்துறை), சி.பி.ஐ. மற்றும் ஐ.டி. (வருமான வரித்துறை). மற்ற கட்சிகள் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. அந்த கூட்டணியில் உள்ள சில கட்சிகளுக்கு ஒரு எம்.பி.க்கள் கூட கிடையாது. இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.
எது உண்மையான சிவசேனா?
பொது சிவில் சட்ட விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "முதலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பசுவதை தடுப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்" என்று உத்தவ் தாக்கரே பதிலளித்தார். எது உண்மையான சிவசேனா என்ற கேள்விக்கு பதிலளித்த உத்தவ் தாக்கரே, "தாக்கரே குடும்பம் எங்கு இருக்கிறதோ, அது தான் உண்மையான சிவசேனா" என்று குறிப்பிட்டார். மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், "எதிர்ப்பு அணியினரால் எங்களுக்கு மாற்று ஆசிர்வாதம் கிடைத்துள்ளது. பல ஆண்டுகளாக அவர்கள் ஆக்கிரமித்து இருந்த இருக்கைகளில் புதியவர்கள் அமர வாய்ப்பு கிடைத்துள்ளது" என்று குறிப்பிட்டார். "ஊழல் விவகாரத்தில் சட்டம் அனைவருக்கும் ஒன்று தான். பா.ஜனதாவில் உள்ள ஊழல்வாதிகளும் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்" என்றும் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டார்.