மராட்டிய அரசு 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓடும் '3 கால் விலங்கு' - ப.சிதம்பரம் கடும் விமர்சனம்
மராட்டிய கூட்டணி அரசு 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓடும் '3 கால் விலங்கு' என ப.சிதம்பரம் விமர்சித்து உள்ளார்.
மும்பை,
மராட்டிய கூட்டணி அரசு 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓடும் '3 கால் விலங்கு' என ப.சிதம்பரம் விமர்சித்து உள்ளார்.
ப.சிதம்பரம் விமர்சனம்
மராட்டியத்தில் சிவசேனா-பா.ஜனதா கூட்டணி அரசில் அஜித்பவார் தலைமையில் பிளவுபட்ட தேசியவாத காங்கிரஸ் இணைந்து உள்ளது. அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மந்திரிகளாகவும் கடந்த 2-ந் தேதி பதவி ஏற்றனர். ஆனால் அவர்களுக்கு இன்னமும் இலாகா ஒதுக்கப்படாமல் உள்ளது. இந்தநிலையில் மராட்டிய அரசை கடுமையாக விமர்சித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
'3 கால் விலங்கு'
முதல்-மந்திரியும், 2 துணை முதல்-மந்திரிகளும் தங்களது அரசு, 3 என்ஜின் அரசு என கூறுகின்றனர். ஆனால் எனக்கு அது 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 3 கால் விலங்கு ஓடுவது போல தோன்றுகிறது. இலாகா ஒதுக்காததால் மராட்டியத்தில் புதிய 9 மந்திரிகள் வேலையில்லாமல் உள்ளனர். தேவேந்திர பட்னாவிஸ் உள்பட 20 மந்திரிகளில் யாரும் அவர்களது இலாகாவை விட்டு கொடுக்க தயாராக இல்லை. இதற்கு ஒரு தீர்வு உள்ளது. 9 புதிய மந்திரிகளும், இலாகா இல்லாத மந்திரிகள் என அறிவிக்க வேண்டும். 9 பேரும் மந்திரி பதவிக்காக தான் அரசில் இணைந்தார்கள். இலாகாவுடன் தான் அவர்கள் மந்திரிகளாக இருக்க விரும்புகிறார்கள் என யார் கூறியது?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.