மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் பா.ஜனதாவுக்கு கிடைத்தது பெரிய வெற்றி அல்ல- சஞ்சய் ராவத் கருத்து
மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் பா.ஜனதாவுக்கு கிடைத்தது பெரிய வெற்றி அல்ல என சிவசேனாவின் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
மும்பை,
மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் பா.ஜனதாவுக்கு கிடைத்தது பெரிய வெற்றி அல்ல என சிவசேனாவின் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
பா.ஜனதா வெற்றி
மராட்டியத்தில் இருந்து 6 மாநிலங்களவை எம்.பி.யை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் 6-வது எம்.பி.யை கைப்பற்றுவது இடையே ஆளும் மகாவிகாஸ் கூட்டணி, பா.ஜனதா இடையே கடும் போட்டி நிலவியது.
இந்தநிலையில் தேர்தலில் 6-வது எம்.பி. பதவியை பா.ஜனதா கைப்பற்றியது. 6-வது எம்.பி.யாக பா.ஜனதாவின் தனஞ்செய் மகாதிக் வெற்றி பெற்றார். சிவசேனாவின் சஞ்சய் பவார் தோல்வி அடைந்தார்.
பெரிய வெற்றி அல்ல
இதுகுறித்து சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறுகையில், " மத்திய முகமைகள் மற்றும் தோ்தல் ஆணையத்தை பயன்படுத்தி நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால், என்ன மாதிரியான வெற்றி இது?. பா.ஜனதா ஜெயித்து உள்ளது. ஆனால் இது வெற்றி அல்ல. சஞ்சய் பவாருக்கு 33 முதன்மை வாக்குகள் கிடைத்து உள்ளன. தனஞ்செய் மகாதிக்கிற்கு 27 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. ஆனால் அவர் 2-வது முன்னுரிமை வாக்குகள் அடிப்படையில் வெற்றி பெற்று உள்ளார். எனவே இது பெரிய வெற்றி என்பதில் உண்மையல்ல. எதிர்பார்க்கப்பட்ட சுயேச்சை, சிறிய கட்சிகளின் வாக்குகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆசை வார்த்தைகளை கூறி சில சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை அவர்கள் இழுத்து உள்ளனர். சிலர் மத்திய முகமையின் அழுத்தத்தாலும் வாக்களித்தனர். சில பணப்பரிவர்த்தனைகளும் நடந்து உள்ளன " என்றார்.