தனிப்பட்ட காரணங்களுக்காக சிலர் கட்சியில் இருந்து விலகல்; தேசியவாத காங்கிரசில் எந்த பிளவும் இல்லை - தேர்தல் ஆணையத்துக்கு, சரத்பவார் அணி பதில்
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் எந்த பிளவும் இல்லை என தேர்தல் ஆணையத்திற்கு சரத்பவார் அணி பதிலளித்து உள்ளது.
மும்பை,
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் எந்த பிளவும் இல்லை என தேர்தல் ஆணையத்திற்கு சரத்பவார் அணி பதிலளித்து உள்ளது.
அஜித்பவார்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சரத்பவாரின் அண்ணன் மகனுமான அஜித்பவார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பேர் சமீபத்தில் மராட்டிய பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்தனர். அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர். ஆனால் கட்சியின் தேசிய தலைவரான சரத்பவார் இதற்கு ஆதரவு தெரிவிக்காத காரணத்தால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இந்த நிலையில் அஜித்பவார் தரப்பு கட்சியில் பெரும்பான்மை ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறி, கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் கடிதம் வழங்கியது.
பிளவு இல்லை
இந்த நிலையில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அஜித்பவார் தாக்கல் செய்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்குமாறு கோரி இருந்தது. எங்களது முதற்கட்ட பதிலை தேர்தல் ஆணையத்திடம் கடந்த 7-ந் தேதி தெரிவித்துள்ளோம். அஜித்பவார் கட்சியில் தொடர்ச்சியான முரண்பட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அவர் சட்டரீதியாகவோ அல்லது பொருள் ரீதியாகவோ எந்த அடிப்படையும் இல்லாமல் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். சிலர் கட்சியை விட்டு விலகியதை தவிர தேசியவாத காங்கிரஸ் கட்சியில் எந்த பிளவும் ஏற்படவில்லை. அவர்கள் தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகி உள்ளனர். கட்சி தலைவர் சரத்பவாருக்கு பின்னால் இருப்பவர்கள் தொடர்ந்து அவருடனேயே உள்ளனர். கட்சி பெரும்பான்மை ஒன்றுபட்டு உள்ளது என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.