லஞ்சம் கொடுத்ததாக ஷாருக்கான், ஆர்யன் கானுக்கு எதிராக வழக்கு - ஐகோர்ட்டில் வக்கீல் மனு
லஞ்சம் கொடுத்ததாக ஷாருக்கான், ஆர்யன் கானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டில் வக்கீல் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.;
மும்பை,
லஞ்சம் கொடுத்ததாக ஷாருக்கான், ஆர்யன் கானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டில் வக்கீல் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனு தாக்கல்
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப்பொருளை கொண்டு சென்றதாக கூறி கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த வழக்கில் ஆர்யன் கான் செய்த குற்றத்திற்கு போதிய சாட்சியம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே ஆர்யன் கானை விடுதலை செய்ய அப்போதைய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மண்டல இயக்குனராக இருந்த சமீர் வான்கடே மிரட்டி லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வக்கீல் ஈஸ்வர்லால் அகர்வால் என்பவர் நடிகர் ஷாருக்கான், அவரது மகன் ஆர்யன் கான் மற்றும் அவர்களின் மேலாளர் பூஜா தத்லானி ஆகியோர் லஞ்சம் வழங்கியதாக வழக்குப்பதிவு செய்ய கோரி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் அவர் மனுவில் கூறி இருப்பதாவது:-
தவறான உள்நோக்கம்
லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மேலாளரின் வாக்குமூலத்தை பதிவு செய்யாமலேயே சி.பி.ஐ. அதிகாரிகள் தவறான உள்நோக்கத்துடன் அவசர கதியில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் வாக்குமூலத்தை பதிவு செய்யாமல் முன்னாள் அதிகாரி சமீர் வான்கடேவை கைது செய்ய சி.பி.ஐ. விரும்பியது. இது சி.பி.ஐ. அதிகாரிகளின் தவறான நோக்கத்தை நிரூபிக்க போதுமான ஆதாரமாகும். மேலும் சாட்சிகளில் ஒருவரான ஞானேஷ்வர் சிங் என்பவரே இந்த வழக்கில் விசாரணையும் நடத்தி உள்ளார்.
போலி ஆவணங்கள்
மூத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஞானேஷ்வர் சிங் மற்றும் பலர், சி.பி.ஐ. அதிகாரிகளுடன் இணைந்து போலி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். மேலும் பொய்யான மற்றும் தவறாக வழிநடத்தக்கூடிய பிரமாண பத்திரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் சட்டத்திற்கு புறம்பான வகையில் கோர்ட்டின் நேரத்தை வீணடித்த சி.பி.ஐ. மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு கடும் அபராதம் விதிப்பதுடன், விசாரணை நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.