9 பேர் தற்கொலையில் பரபரப்பு தகவல்; 13 பேர் அதிரடி கைது
மராட்டியத்தில் 9 பேர் தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் 13 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது;
மும்பை,
மராட்டியத்தில் 9 பேர் தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் 13 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது
9 பேர் தற்கொலை
சாங்கிலி மாவட்டம் மீரஜ் தாலுகா மாய்சல் கிராமத்தை சேர்ந்தவர் கால்நடை டாக்டர் மாணிக் எல்லப்பா (வயது 49). இவரது சகோதரர் ஆசிரியர் போபட் எல்லப்பா (54). நேற்று மாணிக் எல்லப்பா, அவரது அண்ணன் போபட் எல்லப்பா, அவர்களது 74 வயது தாய், மனைவிகள், 4 குழந்தைகள் என ஒரே குடும்பத்தில் 9 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் உடல்கள் 2 பேரின் வீடுகளில் இருந்தும் மீட்கப்பட்டது.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாக அண்ணன்- தம்பியான 2 பேரும் குடும்பத்தினருடன் தற்கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் மராட்டியம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
25 பேர் மீது வழக்குப்பதிவு
இந்தநிலையில் போலீசார் தற்கொலை கடிதம் ஒன்றையும் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் உள்ள தகவல்களின்படி, தற்கொலை செய்த குடும்பத்தினரை கடன் கொடுத்த 25 பேர் துன்புறுத்தியது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து மாணிக் எல்லப்பா, போபட் எல்லப்பா சகோதரர்கள் தொழிலுக்காக அதிகளவில் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை திருப்பி செலுத்த முடியாத சூழலில் தொல்லைக்கு ஆளாகி, அவமானப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் சம்பந்தப்பட்ட 25 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டுதல், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
13 பேர் கைது
மேலும் இவர்களில் 13 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக சாங்கிலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீக்சித் தெரிவித்தார்.
இதேபோல மாணிக் எல்லப்பா, போபட் எல்லப்பா இரிடியம் மோசடி கும்பல் வலையில் சிக்கி அதிக பணத்தை இழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. சகோதரர்கள் 2 பேரும் வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து தங்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி கிடைக்கப்போவதாக கிராமத்தினரிடம் கூறி வந்ததாக ஒருவர் கூறினார். இது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.