தானே அருகே ஸ்கூட்டர் விபத்து - மேம்பாலத்தில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டு 2 வாலிபர்கள் பலி
தானே அருகே மேம்பாலத்தில் ஸ்கூட்டரில் சென்றபோது தடுப்பு சுவரில் மோதி சாலையில் தூக்கி வீசப்பட்டு 2 வாலிபர்கள் பலியானார்கள்.;
மும்பை,
தானே அருகே மேம்பாலத்தில் ஸ்கூட்டரில் சென்றபோது தடுப்பு சுவரில் மோதி சாலையில் தூக்கி வீசப்பட்டு 2 வாலிபர்கள் பலியானார்கள்.
மேம்பாலத்தில் இருந்து விழுந்தனர்
தானே லோக்மான்யா நகரை சேர்ந்தவர் பிரதிக் வினோத்(வயது21). இவர் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் உல்லாஸ்நகரை சேர்ந்த ராஜேஸ் குப்தா (26) என்பவருடன் ஸ்கூட்டரில் மாஜிவாடா பகுதியில் இருந்து தானே ரெயில் நிலையத்துக்கு சென்றார். காஸ்டில் மில் நாக்கா மேம்பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் பால தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் ஸ்கூட்டரில் இருந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் தடுப்பு சுவரை தாண்டி மேம்பாலத்தில் இருந்து கீழே சாலையில் விழுந்தனர்.
2 வாலிபர்களும் பலி
படுகாயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு வாலிபர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்கூட்டர் விபத்தில் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.