சாவர்கர், ஹெட்கேவர் குறித்த பாடம் நீக்கம் - கர்நாடக அரசின் முடிவில் உத்தவ் தாக்கரே நிலைப்பாடு என்ன? பா.ஜனதா கேள்வி

சாவர்கர், ஹெட்கேவர் குறித்த பாடங்களை நீக்க கர்நாடக அரசு எடுத்த முடிவில் உத்தவ் தாக்கரே நிலைப்பாடு என்ன என்று பா.ஜனதா கேள்வி எழுப்பி உள்ளது.;

Update:2023-06-17 01:00 IST

மும்பை,

சாவர்கர், ஹெட்கேவர் குறித்த பாடங்களை நீக்க கர்நாடக அரசு எடுத்த முடிவில் உத்தவ் தாக்கரே நிலைப்பாடு என்ன என்று பா.ஜனதா கேள்வி எழுப்பி உள்ளது.

பாடம் நீக்கம்

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இந்தநிலையில் புதிதாக ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு 6 முதல் 10-ம் வகுப்பு வரை பாடப்புத்தகங்களில் திருத்தம் செய்தது. அதில் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவர் மற்றும் இந்துத்வா சித்தாந்தவாதி சாவர்கர் ஆகியோர் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டது. மேலும் பா.ஜனதா அரசு கொண்டு வந்த கட்டாய மதமாற்ற தடை சட்டத்தையும் நீக்கியது. இதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி மராட்டியத்தில் காங்கிரசுடன் கூட்டணியில் உள்ளது. ஏற்கனவே உத்தவ் தாக்கரே அதிகாரத்திற்காக தனது இந்துத்வா கொள்கையில சமரசம் செய்துகொண்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது.

உத்தவ் தாக்கரேவுக்கு கேள்வி

இந்தநிலையில் கர்நாடக அரசின் முடிவு குறித்து உத்தவ் தாக்கரேவுக்கு மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கேள்வி எழுப்பி உள்ளார். அதில் அவர் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியால் சாவர்கரையும், ஹெட்கேவரையும் பாடப்புத்தகத்தில் இருந்து தான் நீக்க முடியும். ஆனால் மக்களின் இதயத்தில் இருந்து நீக்க முடியாது. மராட்டியத்தில் எதிர்க்கட்சிகள் கர்நாடக மாதிரியை பின்பற்ற விரும்புகின்றன. எனவே இந்த முடிவில் உத்தவ் தாக்கரேவின் நிலைப்பாடு என்ன என்று நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல மராட்டிய பா.ஜனதா தலைவர் சந்திரசேகர் பவான்குலே கூறுகையில், "பாடப்புத்தகத்தில் பாடங்கள் நீக்கப்பட்டது மற்றும் முந்தைய அரசு கொண்டு வந்த மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்யும் கர்நாடக அரசின் முடிவு குறித்து உத்தவ் தாக்கரே தெளிவுப்படுத்த வேண்டும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்