நவிமும்பை துறைமுகத்தில் ரூ.1,725 கோடி போதைப்பொருள் பறிமுதல்
நவிமும்பை ஜவகர்லால் நேரு துறைமுகத்தில் கன்டெய்னரில் இருந்த ரூ.1,725 கோடி போதைப்பொருளை டெல்லி போலீசார் பறிமுதல் செய்தனர்.;
மும்பை,
நவிமும்பை ஜவகர்லால் நேரு துறைமுகத்தில் கன்டெய்னரில் இருந்த ரூ.1,725 கோடி போதைப்பொருளை டெல்லி போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரகசிய தகவல்
மும்பையை அடுத்த நவிமும்பை ஜவகர்லால் நேரு துறைமுகத்தில் கன்டெய்னர் மூலமாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக டெல்லி போதைத்தடுப்பு சிறப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் டெல்லி போலீசார் கடந்த 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நவிமும்பை துறைமுகத்தில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அங்கிருந்த கன்டெய்னர் ஒன்றை சந்தேகத்தின் பேரில் திறந்து பார்த்தனர். அதில் 22 டன் எடையுள்ள ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த கன்டெய்னரை பறிமுதல் செய்தனர்.
ரூ.1,725 கோடி போதைப்பொருள்
சர்வதேச சந்தையில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.1,725 கோடி என தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் 3 ஆயிரம் கிலோ எடையுள்ள போதைப்பொருள் பிடிபட்டதை தொடர்ந்து தற்போது மிகப்பெரிய அளவில் நவிமும்பை துறைமுகத்தில் சிக்கி இருப்பதாக டெல்லி சிறப்பு படை போலீஸ் அதிகாரி தலிவால் தெரிவித்து உள்ளார்.