வசாயில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.10½ லட்சம் கொள்ளை; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வசாயில் கியாஸ் கட்டர் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சத்து 47 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2023-10-01 18:45 GMT

மும்பை, 

வசாயில் கியாஸ் கட்டர் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சத்து 47 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

ஏ.டி.எம். கொள்ளை

பால்கர் மாவட்டம் வசாய், நய்காவ் கிழக்கு ராஷ்மி ஸ்டார் சிட்டி பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. சம்பவத்தன்று காலை பணம் எடுப்பதற்காக இந்த ஏ.டி.எம். மையத்திற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் எந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் ஏ.டி.எம். எந்திரம் கியாஸ் கட்டர் மூலம் உடைக்கப்பட்டு கொள்ளை அரங்கேறி இருப்பது தெரியவந்தது. மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவும் கருப்பு மை பூசி மறைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே வங்கி அதிகாரிகளும் அங்கு வந்து சோதனை நடத்தினர். இதில், ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.10 லட்சத்து 47 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதையடுத்து போலீசார் ஏ.டி.எம். மையம் அருகே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் தொப்பி, முக கவசம் அணிந்த மர்மநபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைகிறார். பின்னர் ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை மூடுகிறார். தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் கருப்பு மை பூசி மறைத்துவிட்டு, கியாஸ் கட்டரை பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளை அடித்துவிட்டு தப்பி ஓடுகிறார். மேலும் அவருக்கு உடந்தையாக 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரும் செயல்பட்டுள்ளார். இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இந்த காட்சிகளை வைத்து கொள்ளையர்களை அடையாளம் கண்டு, கைது செய்யும் நடவடிக்கைகளை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர். வசாய், விரார் பகுதியில் சமீபகாலமாக ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து சுமார் 5 ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்கள் நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்