7-வது மாடியில் இருந்து குதித்து ஓய்வுபெற்ற உதவி போலீஸ் கமிஷனர் தற்கொலை
மும்பையில் 7-வது மாடியில் இருந்து குதித்து ஓய்வுபெற்ற உதவி போலீஸ் கமிஷனர் தற்கொலை செய்து கொண்டார்.;
மும்பை,
மும்பையில் 7-வது மாடியில் இருந்து குதித்து ஓய்வுபெற்ற உதவி போலீஸ் கமிஷனர் தற்கொலை செய்து கொண்டார்.
குடும்பத்தினருடன் தகராறு
மும்பை போலீசில் உதவி கமிஷனராக இருந்து ஓய்வு பெற்றவர் பிரதீப் தேம்கர்(வயது70). இவர் மாட்டுங்கா கிழக்கு தேவ்தர் ரோட்டில் உள்ள கங்கா ஹெரிடேஜ் என்ற அடுக்குமாடி கட்டிடத்தின் 7-வது மாடியில் உள்ள வீட்டில் மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வந்தார். பிரதீப் தேம்கர் மனஅழுத்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதற்காக அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்து உள்ளார். மன அழுத்தம் காரணமாக அவர் அடிக்கடி குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
மாடியில் இருந்து குதித்து தற்கொலை
நேற்று முன்தினம் மாலையும் பிரதீப் தேம்கருக்கு குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மாலை 5.15 மணியளவில் அவர் திடீரென கட்டிடத்தின் 7-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரதீப் தேம்கரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். தகவல் அறிந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.