ராகுல்காந்தி பாதயாத்திரைக்கு கிடைக்கும் வரவேற்பு ; நாட்டின் சூழ்நிலை மாறுவதற்கான அறிகுறி- நானா படோலே பேட்டி
ராகுல்காந்தி பாதயாத்திரைக்கு கிடைக்கும் வரவேற்பு நாட்டின் சூழ்நிலை மாறுவதற்கான அறிகுறி என்று நானா படோலே கூறினார்.;
மும்பை,
ராகுல்காந்தி பாதயாத்திரைக்கு கிடைக்கும் வரவேற்பு நாட்டின் சூழ்நிலை மாறுவதற்கான அறிகுறி என்று நானா படோலே கூறினார்.
மராட்டிய காங்கிரஸ் தலைவர் நானா படோலே நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜாதிவாரி கணக்கெடுப்பு
மராட்டியத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியும், பா.ஜனதாவும் இணைந்து ஆட்சி அமைத்த பிறகு இதர பிற்படுத்த மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்தி உள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட சமூகம் தொடர்பான பாந்திய கமிட்டியின் அறிக்கையை நாங்கள் ஏற்கவில்லை. மத்திய அரசு ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை மராட்டிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் இருந்தார். இவரின் ஆட்சிகாலத்தில் மராட்டியத்திற்கு வரவேண்டிய தண்ணீர் குஜராத்திற்கு திருப்பி விடப்பட்டது. இப்போது அவர் துணை முதல்-மந்திரியாக இருக்கும்போது வேதாந்தா- பாக்ஸ்கான் போன்ற மிகப்பெரிய திட்டம் கைநழுவி உள்ளது.
மராட்டியத்தில் இருக்கும் தொழில்களாவது வேறு இடத்திற்கு சென்றுவிடாது என நாங்கள் நம்புகிறோம்.
ராகுல் காந்தி யாத்திரை
ஏக்நாத் ஷிண்டே அரசு ஜனநாயக விரோத அரசாகும். இது நீண்ட காலம் நீடிக்காது. மாநிலம் முன்னேறுகிறதா, பின்தங்குகிறதா என்பதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். மக்களுக்காக போராடும் காங்கிரஸ், மக்களுக்கான அதிகாரத்தை விரும்புகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் யாத்திரை குறித்து பா.ஜனதா பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறது. ஆனால் அதற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இது நாட்டின் சூழ்நிலை மாறி வருவதற்கான அறிகுறியாகும்.
வரவிருக்கும் உள்ளாட்சி அமைப்புளுக்கான தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்பது கட்சி தொண்டர்களின் கோரிக்கையாகும். புனே மாநராட்சி தேர்தலில் காங்கிரஸ் சொந்த பலத்தில் போட்டியிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.