அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக ராஜ்னிஷ் சேத் நியமனம்- புதிய டி.ஜி.பி.யாக ராஷ்மி சுக்லாவுக்கு வாய்ப்பு
மாநில அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக ராஜ்னிஷ் சேத் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய டி.ஜி.பி.யாக ராஷ்மி சுக்லா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,
மாநில அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக ராஜ்னிஷ் சேத் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய டி.ஜி.பி.யாக ராஷ்மி சுக்லா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேர்வாணைய தலைவராக நியமனம்
மராட்டிய போலீஸ் டி.ஜி.பி. ராஜ்னிஷ் சேத் வருகிற டிசம்பர் மாதத்துடன் ஓய்வு பெற இருந்தார். இந்தநிலையில் அவர் மாநில அரசு பணியாளர் தேர்வாணைய (எம்.பி.எஸ்.சி.) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். டிசம்பர் மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில், மாநில அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம் ராஜ்னிஷ் சேத் மேலும் 2 ஆண்டுகள் பணியாற்ற முடியும் என உள்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். தேர்வாணைய தலைவர் 62 வயது வரை பணியாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குருப் ஏ, பி, சி, தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
ராஷ்மி சுக்லா புதிய டி.ஜி.பி.
மாநில டி.ஜி.பி.யாக உள்ள ராஜ்னிஷ் சேத் தேர்வாணைய தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், புதிய மாநில டி.ஜி.பி.யாக எதிர்க்கட்சி தலைவர்கள் போன் ஒட்டுகேட்பு சர்ச்சையில் சிக்கிய ஐ.பி.எஸ். அதிகாாி ராஷ்மி சுக்லா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று மாநில புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள ராஷ்மி சுக்லாவுக்கு வாழ்த்துகள் என பா.ஜனதாவை சேர்ந்த மந்திரி சுதீர் முங்கண்டிவார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். எனினும் சிறிது நேரத்தில் அவர் அந்த பதிவை நீக்கியது குறிப்பிடத்தக்கது.