ஆபாச வீடியோ கால் மோசடி கும்பல் மிரட்டலுக்கு பயந்து ரெயில்வே ஊழியர் தற்கொலை; மும்பையில் அதிர்ச்சி சம்பவம்

ஆபாச வீடியோ கால் மோசடி கும்பல் மிரட்டலுக்கு பயந்து ரெயில்வே ஊழியர் ஓருவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-10-11 19:00 GMT

மும்பை, 

ஆபாச வீடியோ கால் மோசடி கும்பல் மிரட்டலுக்கு பயந்து ரெயில்வே ஊழியர் ஓருவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரெயில்வே ஊழியர் தற்கொலை

மராட்டிய தலைநகர் மும்பையை அடுத்த தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியை சேர்ந்தவர் ஜக்தீஷ்(வயது36). இவர் தாய், மனைவி உஷா (36) மற்றும் 2 பிள்ளைகளுடன் வசித்து வந்தார். ஜக்தீஷ் மும்பை மாட்டுங்காவில் உள்ள ரெயில்வே பணிமனையில் வேலை பார்த்து வந்தார். கடந்த திங்கட்கிழமை அவர் வழக்கம் ேபால காலை 6 மணிக்கு வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டார். காலை 10.30 மணிக்கு உஷா, ஜக்தீசுக்கு போன் செய்தார். அப்போது அவர் வேலையில் இருப்பதால் சிறிது நேரம் கழித்து பேசுவதாக கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். இந்தநிலையில் மதியம் அவர் மாட்டுங்கா பகுதியில் ரெயில் மோதி உயிரிழந்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது பையில் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதன் மூலம் ஜக்தீஷ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

முகநூல் மூலம் வலை

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. ஜக்தீசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் கோமல் சர்மா என்ற பெண் முகநூலில் அறிமுகம் ஆகி உள்ளார். அந்த பெண் இனிமையாக பேசி ரெயில்வே ஊழியருடன் நெருக்கமானார். 2 பேரும் வீடியோ காலில் பேசி உள்ளனர். அப்போது பெண் ரெயில்வே ஊழியரை ஆபாசமாக வீடிேயா பதிவு செய்து வைத்து இருக்கிறார். ஆரம்பத்தில் இனிக்க, இனிக்க பேசிய அந்த பெண் ஆபாச வீடியோ பதிவு கிடைத்த பிறகு தனது சுயரூபத்தை காட்டி உள்ளார். அவர் பணம் தரவில்லை எனில் ஆபாச வீடிேயா குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துவிடுவேன் என மிரட்டினார். ரெயில்வே ஊழியர் பெண்ணின் மிரட்டலுக்கு பயப்படாமல் பணம் எதுவும் தரமுடியாது என தெரிவித்தார்.

போலீஸ் என கூறி மிரட்டல்

இந்தநிலையில் பிரேம் பிரகாஷ் என்பவர் ரெயில்வே ஊழியரை தொடர்பு கொண்டு பேசினார். டெல்லி சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி என கூறிய அவர், கோமல் சர்மா ஆபாச வீடியோ குறித்து புகார் அளித்து இருப்பதாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் தர வேண்டும் என மிரட்டினார். போலீஸ் அதிகாரி என கூறியதும் பயந்து போன ரெயில்வே ஊழியர் அவர் கேட்கும் போது எல்லாம் பணம் கொடுத்து உள்ளார். இந்தநிலையில் 3-வது ஒரு நபரும் ரெயில்வே ஊழியரை ஆபாச வீடியோ விவகாரத்தில் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். மிரட்டல் கும்பலுக்கு ரெயில்வே ஊழியர் ரூ.2 லட்சம் வரை கொடுத்து உள்ளார். தொடர்ந்து அவர்கள் பணம் கேட்டு மிரட்டியதால் விரக்தி அடைந்த ரெயில்வே ஊழியர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

3 பேர் மீது வழக்குப்பதிவு

இதையடுத்து போலீசார் ஆபாச வீடியோ காலை பதிவு செய்து ரெயில்வே ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டிய பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆபாச வீடியோ கால் மோசடி கும்பல் மிரட்டலுக்கு பயந்து ரெயில்வே ஊழியர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக ஆன்லைன் மோசடி கும்பல் பெண்களை வைத்து ஆண்களை வீடியோ கால் மூலம் பேசவைத்து, அதை வீடியோவாக பதிவு செய்து பணம்கேட்டு மிரட்டி வரும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இதுபோன்ற நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பணம் எதுவும் கொடுக்காமல் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்க வேண்டும் என போலீசார் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்