காட்டுத்தீயை ஏற்படுத்திய விவசாயிக்கு நூதன தண்டனை- 1,000 மரக்கன்றுகளை நட கோர்ட்டு உத்தரவு

மராட்டியத்தில் காட்டுத்தீயை ஏற்படுத்திய விவசாயியை 1,000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்க கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-05-21 15:35 GMT

மும்பை, 

  காட்டுத்தீயை ஏற்படுத்திய விவசாயியை 1,000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்க கோர்ட்டு உத்தரவிட்டது.

காட்டுத்தீ

  மராட்டிய மாநிலம் சத்தாரா மாவட்டம் காரட் தாலுகா நந்த்காவ் கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் பாட்டீல். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் விளைந்த கரும்புகளை வெட்டிய பிறகு, அங்கு கிடந்த கழிவுகளுக்கு தீ வைத்து எரித்தார். அப்போது வீசிய பலத்த காற்று காரணமாக அங்குள்ள வனப்பகுதிக்கும் தீ பரவியது. இதில் வனத்துறைக்கு சொந்தமான 1,622 மரங்கள் எரிந்து நாசமாகின.

  இதுதொடர்பாக வனத்துறையினர் விவசாயி சுபாஷ் பாட்டீல் மீது வழக்குப்பதிவு செய்து காரட்டில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

நூதன தண்டனை

  வழக்கை மாஜிஸ்திரேட்டு எஸ்.ஏ.விரானி விசாரித்து வந்தார். விசாரணையின்போது, விவசாயி சுபாஷ் பாட்டீல் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஆனால் காட்டுத்தீயை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் தனக்கு இருந்ததில்லை என்று கூறினார்.

  விசாரணை முடிவில், விவசாயி சுபாஷ் பாட்டீலுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். மேலும் அவருக்கு நூதன தண்டனை விதித்தார். அதன்படி, தீயால் அழிந்த வனப்பகுதியில், 1,000 மரக்கன்றுகளை நட்டு, அவற்றை பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மரக்கன்றுகளை பராமரிப்பது தொடர்பாக மல்காபூரில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு விவசாயி சுபாஷ் பாட்டீல் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

-----

Tags:    

மேலும் செய்திகள்