ராகுல் காந்திக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்- பா.ஜனதா தலைவர் பேட்டி
சாவர்க்கர் பற்றி அவதூறாக பேசிய ராகுல் காந்திக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என பா.ஜனதா தலைவர் கூறியுள்ளார்.
மும்பை,
'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மும்பை வந்து உள்ளார். இந்தநிலையில் வீர சாவர்க்கருக்கு எதிராக கருத்து கூறி வரும் ராகுல் காந்திக்கு எதிராக 'இந்தியா' கூட்டணி கூட்டம் நடைபெறும் ஓட்டல் அருகில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மும்பை பா.ஜனதா தலைவர் ஆஷிஸ் செலார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ராகுல் காந்தி தொடர்ந்து சாவர்க்கரை அவமதித்து வருகிறார். எனவே அவர் பேச உள்ள ஓட்டல் அருகில் எங்கள் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். உத்தவ் தாக்கரே, சாவர்க்கரின் தீவிர தொண்டர் என கூறுகிறார். ஆனால் ராகுல் காந்தி அவரை அவமதித்து பேசுகையில் அமைதியாக உள்ளார். சிவசேனாவை வெறுத்தவர்களுக்கு உத்தவ் தாக்கரே, கட்சியினர் விருந்து வைக்கின்றனர். எதிர்க்கட்சியினர் பல ஆண்டுகளாக பால் தாக்கரேயை வெறுத்தவர்கள். தற்போது அவர்கள் எல்லோரும் ஒன்று திரண்டு வருகிறார்கள். அவர்களுக்கு உத்தவ் தாக்கரே உணவு பரிமாறுகிறார். மராட்டியத்தை வெறுக்கும் கட்சிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பதற்காக சரத்பவார் வெட்கப்பட வேண்டும். இந்தியா கூட்டணி ஜனநாயகத்தை காக்க ஒன்று சேர்ந்து உள்ளதாக கூறி வருகின்றனர். உண்மையில் அவர்கள் குடும்பத்தை காக்கவே ஒன்று திரண்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.