ராக்கெட் வேகத்தில் விலை உயர்வு - தக்காளி கிலோ ரூ.130-க்கு விற்பனை

தக்காளி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கிலோ ரூ.130-க்கு விற்பனை ஆகி வருகிறது.

Update: 2023-07-05 19:00 GMT

மும்பை, 

தக்காளி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கிலோ ரூ.130-க்கு விற்பனை ஆகி வருகிறது.

விளைச்சல் பாதிப்பு

மராட்டியத்தில் ஏற்கனவே பருவம் தவறிய மழையின் காரணமாக பயிர்கள் நாசமடைந்தது. தற்போது பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருவதால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தற்போது காய்கறி விலை தாறுமாறாக உயர்ந்து உள்ளது. அண்மையில் பச்சை மிளகாய் விலை ரூ.100-ஐ தாண்டியது. தற்போது தக்காளி விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதுபற்றி ஏ.பி.எம்.சி மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறுகையில், "கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொத்த சந்தையில் தக்காளி கிலோ ரூ.2 முதல் ரூ.3 வரையில் தான் விற்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தக்காளியை சாலையோரங்களில் வீசி எறிந்தனர். இதன்பிறகு ஏராளமான விவசாயிகள் தக்காளி விளைச்சலில் ஈடுபடவில்லை. இதன் காரணமாக மொத்த சந்தையில் தக்காளி வரத்து குறைந்து உள்ளது.

35 லாரிகளில்...

தற்போது தக்காளி ஏற்றிய லாரிகள் சுமார் 35 எண்ணிக்கையில் சந்தைக்கு வருகிறது. இருப்பினும் மும்பை அதை சுற்றியுள்ள பகுதிகளின் தேவையை பூர்த்தி செய்ய இது போதுமானதாக இல்லை. கடந்த வாரம் தக்காளி விலை கிலோ ரூ.80 ஆக விற்பனை ஆனது. தற்போது மழைக்காலம் என்பதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் சில்லறை விலையில் கிலோ ரூ.130-ஐ எட்டி உள்ளது. மொத்த விலையில் கிலோ ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனை ஆகிறது. கிலோ ரூ.150-ஐ தாண்டும் என்ற அபாயம் ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ராக்கெட் வேகத்தில் தக்காளி விலை உயர்ந்து வருவதால் மும்பை வாசிகள் பெரும் சிரமம் அடைந்து உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்