போலீஸ்காரர் 1½ கி.மீ. தூரம் காரில் இழுத்து செல்லப்பட்டதால் பரபரப்பு- வாலிபர் கைது

மும்பை அருகே 1½ கி.மீ. தூரத்துக்கு போலீஸ்காரரை காரில் இழுத்து சென்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-13 18:45 GMT

மும்பை, 

மும்பை அருகே 1½ கி.மீ. தூரத்துக்கு போலீஸ்காரரை காரில் இழுத்து சென்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

சிக்னலில் நிற்காத கார்

வசாய் பகுதியில் சம்பவத்தன்று போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சந்திப்பு பகுதியில் போலீஸ்காரர் ஒருவர் பணியில் இருந்தார். அவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி கொண்டு இருந்தபோது, உத்தரபிரதேச பதிவெண் கொண்ட கார் சிக்னலில் நிற்காமல் வேகமாக வந்தது.

இதை கவனித்த போலீஸ்காரர் காரை மறித்து டிரைவரிடம் விசாரித்தார். அப்போது டிரைவர் திடீரென காரை வேகமாக ஓட்டிச்சென்றார்.

இழுத்து செல்லப்பட்ட போலீஸ்காரர்

அப்போது, கார் மோதி போலீஸ்காரர் அதன் பேனட்டில் விழுந்தார். எனினும் டிரைவர் காரை நிறுத்தவில்லை. அவர் சுமார் 1½ கி.மீ.க்கு காரை ஓட்டிச்சென்றார். பேனட்டில் சிக்கிய போலீஸ்காரரும் காருடன் இழுத்து செல்லப்பட்டார். போக்குவரத்து நெரிசலில் சிக்கி கார் நின்றது. அப்போது அங்கு இருந்தவர்கள் டிரைவரை பிடித்தனர். பின்னர் அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். காரில் இழுத்து செல்லப்பட்டதில் போலீஸ்காரர் படுகாயமடைந்தார். இந்த சம்பவத்தால் வசாய் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காரை ஓட்டிச்சென்றவர் 19 வயது வாலிபர் என்பதும், அவருக்கு ஓட்டுனர் உரிமம் கூட இல்லை என்பதும் தெரியவந்து உள்ளது.

வாலிபர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்