போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.1.90 லட்சம் மோசடி செய்த 3 பேருக்கு வலைவீச்சு
மும்பை தானேயில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.1.90 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்;
தானே,
கல்யாணை சேர்ந்தவர் சம்சுதீன் சேக். இவர் அதே பகுதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளரிடம் நன்றாக பழகி வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் சம்சுதீன் சேக் 2 பேரை அந்த நகைக்கடைக்கு அழைத்து வந்தார். அவர் நகைக்கடை உரிமையாளரிடம் சம்பந்தப்பட்ட 2 பேருக்கும் அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், அவர்களிடம் உள்ள நகைகளை அடமானமாக பெற்றுக்கொண்டு பணம் தருமாறும் கேட்டார். இதனை நம்பிய நகைக்கடை உரிமையாளர் 2 பேரிடம் இருந்த நகைகளை அடமானமாக பெற்றுக்கொண்டு ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தை கொடுத்து உள்ளார். அந்த பணத்தை பெற்றுக்கொண்டு 3 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் கடை உரிமையாளர் அடமானம் வைத்த நகைகளை சோதனை நடத்தியபோது, அவை போலியானது தெரியவந்தது. இதைதொடர்ந்து சம்சுதீன் சேக்கை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதன்மூலம் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட நடைக்கடைக்காரார், இதுகுறித்து உடனடியாக கடக்பாடா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சம்சுதீன் சேக் மற்றும் அவரது கூட்டாளிகளான மகேஷ் கதம், குணால் தெவ்னே ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.