கொண்டாட்டத்துக்கு இன்னும் இரண்டே நாட்கள்... - விநாயகர் சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்

விநாயகர் சதுர்த்தி திருவிழாவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் சிலையை தேர்வு செய்வதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி உள்ளனர்.

Update: 2023-09-16 19:00 GMT

மும்பை, 

விநாயகர் சதுர்த்தி திருவிழாவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் சிலையை தேர்வு செய்வதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி உள்ளனர்.

10 நாள் கொண்டாட்டம்

மும்பையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். மண்டல்களில் பிரமாண்ட சிலைகளை 10 நாட்கள் வைத்து வழிபாடு செய்வது வழக்கம். வீடுகளிலும் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து, நீர்நிலைகளில் கரைக்கிறார்கள். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு 2 நாட்களே உள்ள நிலையில், பெரும்பாலான மண்டல்களை விநாயகர் சிலைகள் சென்று அடைந்து விட்டன. அங்கு விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாட்டுக்கு தயாராகி வருகின்றன. இதற்கிடையே பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கான விநாயகர் சிலையை தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக உள்ளனர். பலர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தரத்தை கருத்தில் கொண்டு ஒரே கடையில் சிலைகளை வாங்குகின்றனர். இன்னும் பலர் தங்கள் விருப்பப்படி விநாயகர் சிலைகளை வடிவமைக்க சொல்லி வாங்குகின்றனர். மத்திய மும்பையில் உள்ள லால்பாக் பகுதியில் 12 ஆண்டுகளாக சிலை தயாரிப்பு கடை நடத்தி வரும் சுனில் பஞ்சால் கூறியதாவது:-

3 வகை சிலைகள்

ஒவ்வொரு ஆண்டும் 300 நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு சிலை தருகிறேன். ஆண்டுதோறும் என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் என்னிடமே தொடர்ந்து வருகின்றனர். சிலர் தங்கள் சிலையை லால்பாக் ராஜா, தக்துசேத் கணபதி மற்றும் திட்வாலா பைதக் பாணியில் வடிவமைக்க விரும்புகிறார்கள். இந்த 3 வகையான சிலைகளும் அதிக அளவில் விற்பனையாகின்றன. கடைசி நிமிடத்தில் வரும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் தற்போது எனது கடைசியில் 1 அடி முதல் 8 அடி வரை 400 சிலைகளை வைத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

சிலை தேர்வு

இதேபோல அதே பகுதியில் கடை வைத்துள்ள ராஜேஷ் பெடி கூறுகையில், "வாடிக்கையாளர்கள் கடைக்கு வரும்போது வித்தியாசமான யோசனைகளை கொண்டு வருகின்றனர். எனக்கு நிலையான வாடிக்கையாளர்கள் உள்ளனர். சிலர் ஒவ்வொரு ஆண்டும் லால்பாக் ராஜா போன்ற சிலையை எடுத்து செல்கின்றனர். சிலர் பலவகையான சிலைகளை விரும்புகின்றனர்" என்றார். வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், "ஒவ்வொரு வருடமும் எனது அம்மாதான் சிலையை தேர்ந்தெடுப்பார், அது ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமாக இருக்கும். இந்த முறை எனது தந்தை இதய அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வருவதால் எங்கள் கொண்டாட்டம் இன்னும் சிறப்பாக இருக்கும். கணபதி பப்பாவுக்கு நன்றி" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்