ஆன்லைன் மோசடி அதிகரிப்பு: தெரியாத நபர்களின் வீடியோ அழைப்புகளை தவிர்க்க வேண்டும்- சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
ஆன்லைன் மோசடி அதிகரிப்பு காரணமாக தெரியாத நபர்களின் வீடியோ அழைப்பு, நட்பு கோரிக்கையை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு சைபர் குற்றப்பிரிவு போலீஸ் கோரிக்கை வைத்துள்ளது.
மும்பை,
ஆன்லைன் மோசடி அதிகரிப்பு காரணமாக தெரியாத நபர்களின் வீடியோ அழைப்பு, நட்பு கோரிக்கையை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு சைபர் குற்றப்பிரிவு போலீஸ் கோரிக்கை வைத்துள்ளது.
பல்வேறு மோசடிகள்
மராட்டியத்தில் தற்போது ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பல்வேறு நூதன முறைகளில் திட்டமிட்டு இதுபோன்ற குற்ற செயல்கள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களின் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது. வீடியோ அழைப்பு, நட்பு கோரிக்கை மற்றும் மிரட்டல் அழைப்புகள் என பல விதமாக மோசடி செய்ய பல கும்பல்கள் இணைய உலகத்தில் சுற்றி வருகின்றன.
இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வீடியோ அழைப்பு
ஆன்லைனில் எந்த பொருட்களுக்காவது விண்ணப்பிக்கும் முன்பும் அல்லது ஏதேனும் இணைப்பை கிளிக் செய்யும் போதும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அதேபோல தெரியாத எண்ணில் இருந்து வரும் வீடியோ அழைப்புகளை மக்கள் ஏற்க வேண்டாம்.
இவ்வாறு அழைக்கும் எண்களில் பெண்கள் ஆபாசமாக தோன்றி எதிரில் இருப்பவர்களுடன் பேசுகின்றனர். பின்னர் இந்த வீடியோவை வைத்து போலீஸ் அதிகாரிகள் போல மிரட்டி பணம் பறிக்கின்றனர்.
எனவே இதுபோன்ற அழைப்புகளை ஏற்கவேண்டாம். மீண்டும், மீண்டும் அதுபோன்ற அழைப்புகள் வந்தால், அந்த எண்ணை தடை செய்யவேண்டும். இல்லையெனில் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.
நட்பு கோரிக்கை
இதேபோல் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் நட்பு கோரிக்கைகளையும் ஏற்க கூடாது.
மோசடி செய்பவர்கள் பெண்களின் புகைப்படங்களை போலியாக பயன்படுத்தி, தங்கள் வலையில் விழும் நபர்களிடம் நெருக்கமாக பேசி நட்புறவை ஏற்படுத்திக்கொண்டு பின்னர் தங்களுக்குள் நடந்த அந்தரங்க பேச்சுகளை வைத்து போலீசில் புகார் செய்ய போவதாக மிரட்டி பணத்தை பறிக்க முயற்சி செய்கின்றனர்.
இதேபோல மின்கட்டண நிலுவை தொகையை செலுத்தாவிட்டால் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று கூறி மக்களை ஏமாற்றி அவர்களிடம் பணத்தை அபேஸ் செய்கின்றனர். இதுபோன்ற 400-க்கும் மேற்பட்ட புகார்கள் எங்களுக்கு வந்துள்ளது. இதுபோன்று அழைப்பவர்களுக்கு எந்த ஒரு பண பரிவார்த்தனையும் செய்வதற்கு முன்பு மின் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பிரிவை தொடர்புகொண்டு உண்மை தன்மையை அறிந்துகொள்வது நன்மை பயக்கும்.
கடன் செயலி
கடன் வழங்கும் செயலிகளின் முகவர்கள் துன்புறுத்தல் காரணமாக சமீப காலமாக மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்துள்ளது.
இதுபோன்ற கடன் செயலிகளை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் அவர்களில் பலர் மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபடுகின்றனர். கடன் பெற அவர்கள் வங்கிகளை அணுக வேண்டும்.
இதேபோல ஆன்லைன் மார்க்கெட் மூலமாக பொருட்கள் வாங்கும்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும். ஏனெனில் பல போலி ஆன்லைன் மார்க்கெட் செயலிகள் உலாவுகின்றன. எனவே பொருட்களை வாங்கும்போதோ விற்பனை செய்யும்போதோ இவைகள் மூலம் பணம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும். எப்போதும் வாங்குபவர்கள், விற்பவர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும். பொருளை வாங்கும்போது பணம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.