ஏற்றுமதி வரியை ரத்து செய்யக்கோரி நாசிக் சந்தைகளில் வெங்காய வியாபாரிகள் வேலை நிறுத்தம் - 2-வது நாளாக ஏலம் நடைபெறவில்லை

ஏற்றுமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாசிக் சந்தைகளில் வெங்காய வியாபாரிகள் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-21 19:15 GMT

மும்பை,

ஏற்றுமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாசிக் சந்தைகளில் வெங்காய வியாபாரிகள் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏலம் நிறுத்தம்

நாட்டில் வெங்காய பற்றாக்குறையை சமாளிக்க, அதன் ஏற்றுமதிக்கு 40 சதவீத வரியை மத்திய அரசு கடந்த மாதம் விதித்தது. இதற்கு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள வெங்காய சந்தைகளில் ஏலம் நிறுத்தப்பட்டது. இந்த மாவட்டத்தில் உள்ள லசல்காவ் சந்தை இந்திய அளவில் பெரிய வெங்காய சந்தையாகும். மத்திய மற்றும் மராட்டிய அரசுகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வெங்காய வியாபாரிகள் போராட்டத்தை தள்ளி வைத்தனர். இந்த நிலையில் இதுவரை தங்களது கோரிக்கை நிறைவேறாததை கண்டித்து நாசிக் மாவட்ட சந்தைகளில் வெங்காய ஏலம் நேற்று முன்தினம் மீண்டும் நிறுத்தப்பட்டது. இந்த போராட்டம் 2-வது நாளாக நேற்றும் நீடித்தது. இதனால் விவசாயிகள் ஏலத்திற்காக கொண்டு வந்த வெங்காய மூட்டைகள் சந்தைகளில் தேங்கி கிடந்தன. வியாபாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக வெங்காய வினியோகம் பாதிக்கப்பட்டு சில்லறை கடைகளில் விலை உயர்வு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்

இதுபற்றி நாசிக் மாவட்ட வெங்காய வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:- வெங்காய ஏற்றுமதியை ரத்து செய்ய வேண்டும், சந்தை கட்டணத்தை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை நாங்கள் முன்வைத்திருந்தோம். இதற்காக கடந்த 19-ந் தேதி வரை காலஅவகாசமும் வழங்கியிருந்தோம். ஆனால் எங்களது கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை. எனவே நாங்கள் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம். இந்த போராட்டத்தால் விவசாயிகள் பெரியளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதை அரசு புரிந்து கொண்டு எங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சட்ட நடவடிக்கை

இந்த நிலையில் நாசிக் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், அனைத்து விவசாய விளைபொருள் சந்தை குழுக்களுக்கு (ஏ.பி.எம்.சி) உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் வியாபாரிகளின் லைசென்ஸ் ரத்து அல்லது இடைநீக்கம் செய்யப்படும் என்று எச்சரித்து உள்ளார். இதுபற்றி நாசிக் மாவட்ட பொறுப்பு மந்திரி அப்துல் சத்தார் கூறுகையில், "20-ந் தேதி நடத்திய பேச்சுவார்த்தையில் வியாபாரிகள் மற்றும் தரகர்கள் பிடிவாதமாக இருந்தனர். இதன் காரணமாக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்