நவராத்திரி, சாத் பூஜை ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை
நவராத்திரி மற்றும் சாத் பூஜைக்கான முன்னேற்பாடுகள் குறித்து மந்திரி மங்கள் பிரபாத் லோதா தலைமையில் ஆலோசனை நடந்தது.;
மும்பை,
நவராத்திரி மற்றும் சாத் பூஜைக்கான முன்னேற்பாடுகள் குறித்து மந்திரி மங்கள் பிரபாத் லோதா தலைமையில் ஆலோசனை நடந்தது.
ஆலோசனை கூட்டம்
மராட்டியத்தில் நவராத்திரி விழா நாளை மறுநாள் 15-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில் நவராத்திரி மற்றும் அடுத்த மாதம் நடக்கும் சாத் பூஜையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மும்பை புறநகர் பொறுப்பு மந்திரியாக இருக்கும் மங்கள் பிரபாத் லோதா தலைமையில் மும்பை மாநகராட்சி தலைமையகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு மும்பை மாநகராட்சி வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒற்றை சாளர முறை
நவராத்திரியை முன்னிட்டு தேவி சிலைகளை பிரதிஷ்டை செய்யும் நவராத்ரோத்சவ் மண்டல்களுக்கு அனுமதி அளிக்கவும், சிலைகளை கரைக்க செயற்கை குளங்களை அமைப்பதற்கும், சிலைகளை கரைக்கும் இடங்களில் விளக்குகள் மற்றும் பிற தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் ஒற்றை சாளர முறையை மும்பை மாநகராட்சி அறிமுகப்படுத்தும். மும்பையில் 82 சாத் பூஜை தளங்கள் உள்ளன. மும்பை மாநகராட்சி அமைப்பு இந்த இடங்களில் தூய்மை பணி மற்றும் பிற வசதிகளை உறுதி செய்யும். மேலும் அந்த பகுதிகளில் மருத்துவ வசதிகள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி தவிர பூஜை நடக்கும் இடங்களில் உடைமாற்றும் அறை வசதியையும் மும்பை மாநகராட்சி வழங்கும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகளுடன், பெஸ்ட் அதிகாரிகளும், மும்பை போலீசார், போக்குவரத்து போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.