மும்பை ஐகோர்ட்டு நீதிபதி திடீர் ராஜினாமா; காரணம் என்ன? பரபரப்பு தகவல்

மும்பை ஐகோர்ட்டு நீதிபதி ரோகித் தேவ் திடீரென ராஜினாமா செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-08-04 20:00 GMT

மும்பை,

மும்பை ஐகோர்ட்டு நீதிபதி ரோகித் தேவ் திடீரென ராஜினாமா செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி பேராசிரியர் விடுதலை

மும்பை ஐகோர்ட்டு நாக்பூர் கிளையில் கூடுதல் நீதிபதியாக ரோகித் தேவ் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிரந்தர நீதிபதியானார். அவர் வருகிற 2025-ம் ஆண்டு ஓய்வு பெற இருந்தார். ரோகித் தேவ் கடந்த ஆண்டு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்த வழக்கில் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவை விடுதலை செய்தார். அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்தார். அவரது தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. மேலும் பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க மும்பை ஐகோர்ட்டு நாக்பூர் கிளைக்கு உத்தரவிட்டது. நாக்பூர் - மும்பை சாம்ருத்தி விரைவு சாலை ஒப்பந்ததாரர்கள் மீது வருவாய் துறை எடுத்த நடவடிக்கையை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கும் தீர்மானத்தை செயல்படுத்தவும் நீதிபதி ரோகித் தேவ் தடை விதித்து இருந்தார்.

திடீர் ராஜினாமா

இந்தநிலையில் நீதிபதி ரோகித் தேவ் நேற்று திடீரென ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் ஐகோர்ட்டில் வக்கீல்கள் மத்தியில் பேசுகையில், " கோர்ட்டில் உள்ள அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் முன்னேற வேண்டும் என்று தான் உங்களை திட்டி உள்ளேன். நீங்கள் அனைவரும் எனது குடும்பத்தினர் போன்றவர்கள். உங்களை காயப்படுத்த நான் விரும்பியதில்லை. என்னை மன்னித்துவிடுங்கள். நான் எனது ராஜினாமாவை கொடுத்துவிட்டேன். நீங்கள் (வக்கீல்கள்) கடுமையாக உழைக்க வேண்டும் " என்றார். இதற்கிடையே, சுயமரியாதைக்கு எதிராக தன்னால் செயல்பட முடியாது என நீதிபதி பேசியதாக வக்கீல் ஒருவர் தெரிவித்தார். இதபற்றி நீதிபதி ரோகித் தேவிடம் நிருபர்கள் கேட்டபோது, "எனது தனிப்பட்ட காரணங்களுக்காக பணியை ராஜினாமா செய்துள்ளேன். ஜனாதிபதிக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்து விட்டேன்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்