மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் கல்லறை அலங்கரிக்கப்பட்டதால் சர்ச்சை- போலீஸ் விசாரணைக்கு உத்தரவு

மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் கல்லறை அலங்கரிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Update: 2022-09-08 14:01 GMT

மும்பை,

மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் கல்லறை அலங்கரிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

கல்லறை அலங்காரம்

மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி மும்பையை சேர்ந்த யாகூப் மேமன். குண்டு வெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இவர், கடந்த 2015-ம் ஆண்டு நாக்பூர் ஜெயிலில் தூக்கிலிடப்பட்டார். பின்னர் அவரது உடல் தென்மும்பை பகுதியில் உள்ள படா கப்ரஸ்தானில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் மும்பையில் உள்ள யாகூப் மேமன் கல்லறை அலங்கரிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

யாகூப் மேமன் கல்லறையில் மார்பிள் கல் பதித்து, அதற்கு எல்.இ.டி. விளக்கு அலங்காரம் போடப்பட்டு இருந்தது.

விளக்குகள் அகற்றம்

இது குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் கல்லறையில் போடப்பட்டு இருந்த எல்.இ.டி. விளக்குகளை அகற்றினர். மேலும் இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் மட்டத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "படி ராத் (சாப்-இ-பரத்) விழாவையொட்டி படா கப்ரஸ்தான் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த விளக்குகள் அகற்றப்பட்டுவிட்டன. யாகூப் மேமன் கல்லறையில் 3 ஆண்டுகளுக்கு முன்பே மார்பிள் போடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மேலும் 13 பேரின் கல்லறைகள் உள்ளன" என்றார்.

பா.ஜனதா குற்றச்சாட்டு

இந்தநிலையில் கடந்த உத்தவ் தாக்கரே ஆட்சியில் தான் யாகூப் மேமன் அடக்கம் செய்யப்பட்ட இடம் கல்லறையாக மாற்றப்பட்டதாக பா.ஜனதா தலைவர்கள் சிலர் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் யாகூப் மேமன் கல்லறையை, புனித இடமாக மாற்ற முயற்சிகள் நடந்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து மராட்டிய பா.ஜனதா தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறுகையில், "250 அப்பாவி மக்களை கொன்ற நபரின் கல்லறையை அழகுப்படுத்தம் முயற்சிக்காக உத்தவ் தாக்கரே மும்பை மற்றும் மராட்டிய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

ஆனால் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றில் இருந்து மக்களை திசை திருப்பவே இதுபோன்ற பிரச்சினைகள் எழுப்பப்படுவதாக சிவசேனா பதிலடி கொடுத்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்