விறுவிறுப்பாக நடந்த மாநிலங்களவை எம்.பி. தேர்தல்- 285 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட்டனர்

மராட்டியத்தில் 24 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை எம்.பி. தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. 285 எம்.எல்.ஏ.க்கள் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.;

Update: 2022-06-10 15:16 GMT

மும்பை, 

மராட்டியத்தில் 24 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை எம்.பி. தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. 285 எம்.எல்.ஏ.க்கள் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

மாநிலங்களவை எம்.பி. தேர்தல்

மாநிலங்களவைக்கு மராட்டியத்தில் இருந்து 6 எம்.பி.க்களை தோ்வு செய்ய 7 பேர் போட்டியிட்டதால் வாக்குப்பதிவு தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆளும் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட சஞ்சய் ராவத் (சிவசேனா), பிரபுல் படேல் (தேசியவாத காங்கிரஸ்), இம்ரான் பிரதாப் கார்கி (காங்கிரஸ்) ஆகியோரும், பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி பியூஷ் கோயல், அனில் போன்டே என 5 வேட்பாளர்கள் வெற்றி உறுதி என்ற நிலையில், 6-வது இடத்துக்கு வெற்றிபெறப்போவது ஆளும் கட்சி சார்பில் போட்டியிடும் சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் பவாரா? அல்லது பா.ஜனதா வேட்பாளரான தனஞ்செய் மகாதிக்கா? என்ற விறுவிறுப்பு ஏற்பட்டது.

சுமார் 24 ஆண்களுக்கு பிறகு நடந்த வாக்குப்பதிவு எம்.எல்.ஏ.க்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. பொதுமக்களுக்கும் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

காலை 9 மணிக்கு தொடங்கியது

இந்த பரபரப்புக்கு மத்தியில் இன்று காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தேசியவாத காங்கிரசை சேர்ந்த மாநில இணை மந்திரி தத்தாரே பார்னே முதல் வாக்கை செலுத்தினார். உடல் நலம் பாதிக்கப்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ. மகேந்திர தால்வி வீல் சேரில் வந்து அவரது ஓட்டை போட்டார்.

இதேபோல பா.ஜனதா எம்.எல்.ஏ. லெட்சுமண் ஜக்தாப் புனேயில் இருந்து ஆம்புலன்சில் வந்து மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் வாக்கை பதிவு செய்தார். புனே கப்சா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. முக்தா திலக் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரும் ஆம்புலன்சில் வந்து ஓட்டுப்போட்டார். அவர் ஆம்புலன்சில் இருந்து ஸ்டெரச்சர் மூலம் வாக்குப்பதிவு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அவருடன் கணவர் சைலேஷ் ஸ்ரீகாந்த் திலக் செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது.

285 எம்.எல்.ஏ.க்கள்

இதேபோல கொரோனாவில் இருந்து மீண்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் அவர்களது வாக்கை செலுத்தினர். மந்திரி ஆதித்ய தாக்கரே வாக்கு சீட்டில் தேர்தல் ஆணைய முத்திரை இல்லாமல் இருந்தது. இதையடுத்து அவருக்கு வேறு வாக்கு சீட்டு வழங்கப்பட்டது. மதியம் 2 மணிக்குள் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட்டு விட்டனர்.

கோர்ட்டு அனுமதி கிடைக்காததால் ஜெயிலில் உள்ள முன்னாள் மந்திரி அனில்தேஷ்முக், மந்திரி நவாப் மாலிக் ஆகிய இருவரும் ஓட்டுப்போட முடியவில்லை. அந்தேரி சிவசேனா எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் சமீபத்தில் உயிரிழந்தார். எனவே மாலை 4 மணியளவில் மொத்தம் உள்ள 288 எம்.எல்.ஏ.க்களில் 285 பேர் வாக்கை பதிவு செய்தனர்.

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எம்.எல்.சி.யாக இருப்பதால், அவருக்கு இந்த தேர்தலில் ஓட்டுரிமை இல்லை.

பா.ஜனதா புகார்

முன்னதாக சிவசேனாவின் சுகாஸ் காண்டே, காங்கிரசின் யஷோமதி தாக்குர், மந்திரி ஜித்தேந்திர அவாத் வாக்களித்தபோது விதிகளை மீறியதாக பா.ஜனதா ஆட்சேபனை தெரிவித்தது. யஷோமதி தாக்குர், ஜித்தேந்திர அவாத் ஆகியோர் அவர்களின் வாக்குசீட்டை ஏஜெண்டிடம் கொடுத்ததாகவும், சுகாஸ் காண்டே மற்ற கட்சி ஏஜெண்டுகளுக்கும் தெரியும் வகையில் வாக்கு சீட்டை காண்பித்ததாக பா.ஜனதா புகார் கூறியது.

மேலும் இதுகுறித்து தேர்தல் அதிகாரி வீடியோ பதிவை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் மத்திய தேர்தல் ஆணையத்தை அணுகுவோம் எனவும் பா.ஜனதா தெரிவித்து உள்ளது.

இதற்கிடையே பா.ஜனதாவின் ஆட்சேபனையை தேர்தல் அதிகாரி நிராகரித்துவிட்டதாக மின்சார துறை மந்திரி நிதின் ராவத் கூறினார். மேலும் மந்திரி சுபாஷ் தேசாய் கூறுகையில், " இதுவரை பதிவான அனைத்து வாக்குகளும் செல்லும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பா.ஜனதா 10 முதல் 12 ஆட்சேபனைகளை தெரிவித்தனர். ஆனால் அதை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது" என்றார்.

இதேபோல பா.ஜனதா முன்னாள் மந்திரி சுதீர் முங்கண்டிவாரின் ஓட்டு செல்லாது என அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்