இஸ்ரேலில் இருந்து இதுவரை 1,000-க்கும் அதிகமான இந்தியர்கள் மீட்பு; மத்திய மந்திரி முரளிதரன் தகவல்
போரால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலில் இருந்து இதுவரை 1,000-க்கும் அதிகமான இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய இணை மந்திரி முரளிதரன் கூறியுள்ளார்.
புனே,
போரால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலில் இருந்து இதுவரை 1,000-க்கும் அதிகமான இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய இணை மந்திரி முரளிதரன் கூறியுள்ளார்.
மீட்பு பணி
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆபரேசன் அஜய் என்ற பெயரில் இஸ்ரேலில் இருந்து தனிவிமானம் மூலம் அங்கு சிக்கி உள்ள இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இந்தநிலையில் போர் நடந்து வரும் இஸ்ரேலில் இருந்து இதுவரை 1,000-க்கும் அதிகமானவர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு துறை இணை மந்திரி முரளிதரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று புனேயில் நிருபர்களிடம் கூறியதாவது:-
1,000-க்கும் அதிகமானோர்
இஸ்ரேலில் சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி உள்ளனர். இங்கு வர விரும்பும் இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் அழைத்து வருகிறோம். திங்கட்கிழமை வரை 5 விமானங்களில் 1,000 முதல் 1,200 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். அபாயகரமான இடங்களில் வசித்து வருவோரை வேறு இடங்களுக்கு மாற்றி வருகிறோம். காசாவில் சிலர் மட்டுமே சிக்கி உள்ளனர். அங்கு சிக்கியவர்களை மீட்க அவர்கள் இருக்கும் இடம் தெரிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினாா்.