'வந்தே மாதரம்' பாடல் குறித்து எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு -

மராட்டிய சட்டசபையில் வந்தே மாதரம் பாடல் குறித்த அபு ஆஸ்மி எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சால் சபையில் அமளி ஏற்பட்டது.;

Update:2023-07-20 01:15 IST

மும்பை, 

மராட்டிய சட்டசபையில் வந்தே மாதரம் பாடல் குறித்த அபு ஆஸ்மி எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சால் சபையில் அமளி ஏற்பட்டது.

சர்ச்சை பேச்சு

மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரின் 3-வது நாளான நேற்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அபு ஆஸ்மி சம்பாஜிநகர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த கலவரம் குறித்து பிரச்சினையை எழுப்பி பேசினார். அப்போது 'வந்தே மாதரம்' என்ற கோஷம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். அவர் கூறுகையில், இந்தியாவில் ஒருவர் வாழவேண்டும் என்றால் அவர்கள் 'வந்தே மாதரம்' கோஷம் போடவேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். எங்களால் அப்படி செய்ய முடியாது. நாங்கள் ஒரே கடவுளை மட்டுமே நம்புகிறோம். அவருக்கு முன்னாள் மட்டுமே தலை வணங்குவோம்' என்று கூறினார்.

கூச்சல், குழப்பம்

இவரின் பேச்சுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷம் எழுப்பினர். இதனால் சட்டசபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது சபாநாயகர் ராகுல் நர்வேகர் சட்டமன்ற உறுப்பினர்களை அமைதியாக இருக்க கேட்டுக்கொண்டார். மேலும் அவர் கூறுகையில், "அபு ஆஸ்மியின் கருத்துகள் தற்போதைய பிரச்சினைக்கு பொருத்தமற்றது. விவாதத்திற்கு பட்டியலிடப்பட்ட பிரச்சினைகளில் மட்டும் அவர் கவனம் செலுத்த வேண்டும்" என்றார். ஆனால் தொடர்ந்து அமளி நீடித்ததால் சட்டசபையை 10 நிமிடம் சபாநாயகர் ஒத்திவைத்தார். மீண்டும் சபை கூடியபோது துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இதுகுறித்து பேசியதாவது:-

தேசிய பாடல்

கோடிக்கணக்கான மக்கள் மற்றும் நாட்டின் அரசியல் அமைப்பு வந்தே மாதரம் மீது ஆழ்ந்த மரியாதை கொண்டுள்ளது. வந்தே மாதரம் குறித்த அபு ஆஸ்மியின் கருத்து தேவையற்றது. வந்தே மாதரம் ஒரு மத வசனம் இல்லை. இந்திய அரசியலமைப்பு இதை தேசிய பாடலாக அங்கீகரித்துள்ளது. அவர் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் சட்டசபையில் எந்த பிரச்சினையை எழுப்ப விரும்பினாலும் அதற்கு நாங்கள் தயார். ஆனால் வந்தே மாதரம் பிரச்சினையை கிளப்ப வேண்டாம். ஜன கண, மன... நமது தேசிய கீதம், அதேபோல வந்தே மாதரம் நமது தேசிய பாடல். வந்தே மாதரம் பாடாமல் எந்த சட்டமன்ற அமர்வையும் நாம் தொடங்குவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்