மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு, ஏக்நாத் ஷிண்டே உத்தரவு
மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டார்.;
மும்பை,
மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டார்.
ஆய்வு கூட்டம்
மராட்டியத்தில் நடந்து வரும் மும்பை, புனே, நாக்பூர் மெட்ரோ திட்டப்பணிகள், நீர்பாசனத்துறை திட்டங்கள், சாம்ருதி விரைவு சாலையில் அமைய உள்ள பொருளாதார சிறப்பு மண்டலங்கள் குறித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்-மந்திரிகள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் கலந்து கொண்டனர். ஆய்வின் போது திட்டப்பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து அதிகாரிகள் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவிடம் விளக்கி கூறினர்.
விரைந்து முடிக்க வேண்டும்
இதையடுத்து அவர் உள்கட்டமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது தொடர்பாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, "திட்டப்பணிகள் சரியான நேரத்தில் முடிந்தால் அது பொதுமக்கள் மட்டுமின்றி தொழில் துறை விரிவாக்கம், ஊரகப்பகுதி வளர்ச்சிக்கு உதவும். மெட்ரோ மற்றும் நீர்பாசனத்திட்டங்களின் உள்கட்டமைப்பு பணிகளை வேகப்படுத்த வேண்டும்" என்றார். கூட்டத்தில் தலைமை செயலாளர் மனோஜ் சவுனிக், மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.