மரத்வாடா விடுதலை தினம்; முதல்-மந்திரி ஷிண்டே தேசிய கொடி ஏற்றினார்

மரத்வாடா விடுதலை தினத்தை முன்னிட்டு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தேசிய கொடியேற்றினார்.

Update: 2023-09-17 20:00 GMT

அவுரங்காபாத், 

மரத்வாடா விடுதலை தினத்தை முன்னிட்டு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தேசிய கொடியேற்றினார்.

மரத்வாடா விடுதலை தினம்

மரத்வாடா மண்டலத்தில் சத்ரபதி சம்பாஜிநகர் (அவுரங்காபாத்), தாராசிவ் (உஸ்மானாபாத்), ஜல்னா, பீட், லாத்தூர், நாந்தெட், ஹிங்கோலி மற்றும் பர்பானி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மண்டலம் 1948-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி ஐதராபாத் நிஜாம் ஆட்சியின் பிடியில் இருந்து மீட்கப்பட்டது. இந்த நாள் மராட்டிய விடுதலை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மரத்வாடா விடுதலை தினத்தை முன்னிட்டு சத்ரபதி சம்பாஜிநகரில் நேற்று முன்தினம் சிறப்பு மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மரத்வாடாவின் வளர்ச்சிக்காக ரூ.45 ஆயிரம் கோடி சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டது. இங்கு பருவமழை பொய்த்ததால் வறட்சி தலைவிரித்தாடும் நிலையில் இந்த சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஷிண்டே கொடி ஏற்றினார்

இந்த நிலையில் நேற்று சத்ரபதி சம்பாஜி நகரில் மரத்வாடா விடுதலை தினம் கொண்டாடப்பட்டது. முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தேசிய கொடியேற்றி வைத்தார். மரத்வாடா விடுதலையை நினைவு கூறும் நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேசுகையில், " பருவமழையின் போது வீணாகும் நீரை கோதாவரி ஆற்றுப்படுகைக்கு திருப்பி விட புதிய நீர்ப்பாசன திட்டம் உதவும். இந்த திட்டத்திற்காக மத்திய அரசிடம் நிதியுதவி கோரி உள்ளேன். மத்திய அரசின் உதவியை நாங்கள் பெறுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். இதைத்தவிர சாலைகள் மற்றும் இதர உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக மாநில அரசு பல நூறு கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. வரும் நாட்களில் மரத்வாடாவில் நல்ல மாற்றம் ஏற்படும். விவசாயிகளின் துயரத்தை போக்க நாங்கள் அதிக நிதியை செலவிட திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்