மின்சார ரெயிலில் பெண் பயணியிடம் ரூ.5 லட்சம் நகைகள் திருடிய ஆசாமி கைது
மின்சார ரெயிலில் பெண் பயணியிடம் ரூ.5 லட்சம் நகைகளை திருடிய ஆசாமியை போலீசார் கோலாப்பூரில் வைத்து கைது செய்தனர்.;
தானே,
மின்சார ரெயிலில் பெண் பயணியிடம் ரூ.5 லட்சம் நகைகளை திருடிய ஆசாமியை போலீசார் கோலாப்பூரில் வைத்து கைது செய்தனர்.
ரூ.5 லட்சம் நகைகள்
தானே மும்ராவை சேர்ந்த பெண் ஒருவர் சம்பவத்தன்று 110 கிராம் கொண்ட தங்க நகைகள் அடங்கிய பையுடன் மின்சார ரெயிலில் பயணம் செய்தார். தானே ரெயில் நிலையத்தில் இறங்கிய போது நகைகள் அடங்கிய பை காணாமல் போய் இருந்தது தெரியவந்தது. அதில் இருந்த நகைகளின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
இது பற்றி அவர் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் நகையை திருடிய ஆசாமி திவா பகுதியை சேர்ந்த ராஜாராம் (வயது46) என தெரியவந்தது.
கோலாப்பூரில் சிக்கினார்
இதன்பேரில் போலீசார் திவாவிற்கு சென்ற போது அவரது வீடு பூட்டி கிடந்ததாகவும் சொந்த ஊரான சாங்கிலிக்கு சென்றிருப்பதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.
இதன்பேரில் சாங்கிலி போலீசாருக்கு தகவல் தெரிவித்து தேடி வந்தனர். ஆனால் அவர் கோலாப்பூருக்கு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 20-ந் தேதி அவர் போலீசில் சிக்கினார். அவரிடம் இருந்து திருட்டு நகைகள், பணம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் தானே அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.