மாலேகாவ் குண்டு வெடிப்பு வழக்கு: பா.ஜனதா பெண் எம்.பி. பிரக்யா சிங் என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்
மாலேகாவ் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணைக்கு பா.ஜனதா பெண் எம்.பி. பிரக்யா சிங், மும்பையில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்.;
மும்பை,
மாலேகாவ் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணைக்கு பா.ஜனதா பெண் எம்.பி. பிரக்யா சிங், மும்பையில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்.
மாலேகாவ் குண்டு வெடிப்பு
மாலேகாவ் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனா். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக போபால் தொகுதி பா.ஜனதா எம்.பி. பிரக்யா சிங் தாக்குர், முன்னாள் ராணுவ அதிகாரி பிரசாத் புரோகித் உள்ளிட்ட 7 பேர் மீது பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பிரக்யாசிங் தாக்குரின் பெயரில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குண்டு வெடிப்பு வழக்கில் பிரக்யாசிங் தாக்குரை கைது செய்தனர். இந்த வழக்கில் 2017-ம் ஆண்டு அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.
கோர்ட்டில் ஆஜர்
இந்தநிலையில் நேற்று நடந்த மாலேகாவ் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையில் பிரக்யா சிங் தாக்குர் ஆஜரானார். அவர் மதியம் 2 மணி அளவில் மும்பையில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டுக்கு வந்தார். அவர் வருவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாகவே வழக்கில் தொடர்புடைய முன்னாள் ராணுவ வீரர் பிரசாத் புரோகித் உள்பட 5 பேர் ஆஜரானார்கள். தாமதமாக வந்த பிரக்யா தாக்குர், உடல்நலம் பாதிப்பு காரணமாக தன்னால் காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க முடியவில்லை என கோர்ட்டில் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு மீதான விசாரணையை அடுத்த மாதம் 3-ந் தேதிக்கு கோர்ட்டு ஒத்தி வைத்தது.