கனமழையின் போது ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என்பதை இலக்காக நிர்ணயிக்க வேண்டும்- அதிகாரிகளுக்கு, உத்தவ் தாக்கரே உத்தரவு

கனமழையின் போது ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என்பதை இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார்.

Update: 2022-06-01 16:21 GMT

மும்பை, 

கனமழையின் போது ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என்பதை இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார்.

கனமழை

மராட்டியத்தில் கனமழையும், இதனால் ஏற்படும் நிலச்சரிவுகளும் ஆண்டு தோறும் உயிர்பலியை வாங்கி வருகிறது. இதை தடுக்க அரசு தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. .

இந்த ஆண்டு பருவ மழை விரைவில் தொடங்க உள்ளது. ஆகையால் மழை பாதிப்பை கட்டுப்படுத்த தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று பருவ மழை முன்ஏற்பாடு குறித்த ஆய்வு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் அவர் கூறியதாவது:-

பேரிடர் மீட்பு படை

மராட்டியத்தில் கடந்த பருவ மழைக்காலங்களில் மராட்டியத்தை புயல் தாக்கி உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதவாறு தடுக்க முதன்முறையாக தேசிய பேரிடர் மீட்பு படையின் 9 பிரிவுகள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

மும்பை, தானே, பால்கர், கோலாப்பூர், சத்தாரா, ராய்காட், ரத்னகிரி, நாந்தெட் மற்றும் கட்சிரோலி ஆகிய இடங்களில் ஜூன் 15-ந் தேதி முதல் செப்டம்பர் 15-ந் தேதிவரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பணியில் இருப்பார்கள்.

இலக்கு

கனமழை சமயங்களில் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து, தலைமை செயலகத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து திட்டமிட்டு அதை செயல்முறை படுத்த வேண்டும்.

இந்த ஆண்டு மழைக்காலத்தின் போது மழை விபத்துகள் காரணமாக ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என்பதை இலக்காக கொண்டு அரசு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் மாநில நிவாரணம் மற்றும் மறுவாழ்வு துறை மந்திரி விஜய் வடேடிவார் கூறுகையில், "நிலச்சரிவு அபாயம் உள்ள 39 இடங்களில் உள்ள அதிகாரிகளுக்கு மீட்பு பணியை விரைவாக மேற்கொள்ள 116 படகுகளும், 18 அதிநவீன வாகனங்களும் வழங்கப்பட்டு உள்ளது" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்