ராஜீவ் காந்தியை போன்றே பிரதமர் மோடிக்கும் 'மிஸ்டர் கிளீன்' என்ற புகழ் பொருந்தும் - அஜித்பவார் பேட்டி

ராஜீவ் காந்தியை போன்று பிரதமர் மோடிக்கும் மிஸ்டர் கிளீன் என்ற புகழ் பொருந்தும் என மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறினார்.

Update: 2023-08-02 19:00 GMT

மும்பை,

ராஜீவ் காந்தியை போன்று பிரதமர் மோடிக்கும் மிஸ்டர் கிளீன் என்ற புகழ் பொருந்தும் என மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறினார்.

விருது வழங்கும் விழா

புனேயில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 'லோக்மான்ய திலக்' தேசிய விருது வழங்கிய விழாவில் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தினார். இதே விழாவில் தேசியவாத காங்கிரசில் பிளவை ஏற்படுத்தி மராட்டிய பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்த துணை முதல்-மந்திரி அஜித்பவாரும் கலந்துகொண்டார். இந்தநிலையில் அஜித்பவார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கருப்பு கொடியை காணவில்லை

பிரதமர் நரேந்திர மோடி வந்த வாகனத்தை புனே மக்கள் சாலையின் இருபுறமும் நின்று வரவேற்றனர். நானும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் ஒரே காரில் பயணித்தோம். ஆனால் நாங்கள் எங்கேயும் கருப்பு கொடிகளை காணவில்லை. எந்த ஒரு பிரதமரும் சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு நாட்டில் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்த தான் நினைப்பார்கள். மணிப்பூரில் நடப்பதற்கு யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும் இதை கவனத்தில் கொண்டுள்ளார். அங்கு நடந்த பிரச்சினைகளுக்கு அனைவரும் தங்கள் கண்டன குரலை எழுப்பி உள்ளனர். பெண்களை நிர்வாணப்படுத்தி இழுத்துசென்ற சம்பவத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை மத்திய அரசும், மணிப்பூர் அரசும் உறுதி செய்துள்ளது.

பிரதமரின் உழைப்பு

பிரதமர் மோடி ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கிறார். தீபாவளி பண்டிகையை அனைவரும் வீட்டில் கொண்டாடும்போது, அவர் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடுகிறார். கடந்த 9 ஆண்டுகளாக அவரது பணியை பார்த்து வருகிறோம். சர்வதேச அளவில் மோடியை போன்ற பிரபலம் உள்ள தலைவர்கள் வேறு யாரும் இல்லை. எப்படி பேசினாலும் உண்மை, உண்மைதான். எனக்கு வளர்ச்சி வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தால் நாம் போராட்டங்களை நடத்தலாம், பேரணிகளை நடத்தலாம், ஆனால் முடிவு அதிகாரத்தில் இருப்பவர்களிடம் தான் உள்ளது.

மிஸ்டர் கிளீன்

மராட்டியத்தில் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்காக சிவசேனா-பா.ஜனதா கூட்டணி அரசில் நாங்கள் இணைந்தோம். பிரதமர் மோடியை போன்று புகழ்பெற்ற தலைவர் நாட்டில் வேறு யாரும் இல்லை. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அவர் ஆற்றிய பணிகளை பாருங்கள். உலக அளவில் இந்தியாவுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள். மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மற்ற நாடுகளுக்கு சென்றபோது இதேபோன்ற மரியாதை கிடைத்தது. பின்னர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு மிஸ்டர் க்ளீன் என்ற பெயர் இருந்தது. அதே நற்பெயர் இப்போது பிரதமர் மோடிக்கும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்