கட்சிரோலி மாவட்டத்தை நக்சலைட்டுகள் பிடியில் இருந்து மீட்போம் - முதல்-மந்திரி ஷிண்டே உறுதி

கட்சிரோலி மாவட்டத்தை நக்சலைட்டுகளின் பிடியில் இருந்து மீட்போம் என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறினார்.

Update: 2023-07-08 20:00 GMT

கட்சிரோலி, 

கட்சிரோலி மாவட்டத்தை நக்சலைட்டுகளின் பிடியில் இருந்து மீட்போம் என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறினார்.

கட்சிரோலியில் விழா

கட்சிரோலி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கும் நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரிகள் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித்பவார் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது:- கட்சிரோலி மாவட்டத்தை சேர்ந்த 11 லட்சம் மக்கள் தொகையில் 'ஷாசன் அப்லியா தாரி' (உங்கள் வீட்டுவாலில் அரசு) திட்டத்தின் பயனாளிகளாக 6 லட்சத்து 70 ஆயிரம் பேர் உள்ளனர். இந்த திட்டத்தின் பயனாளிகள் டிராக்டர், அறுவடை எந்திரங்கள், சைக்கிள்கள், குடோன்கள், சாதி சான்றிதழ்கள் போன்றவற்றை பெற்றுள்ளனர். எங்கள் அரசு பெண்கள் முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. தற்போது கட்சிரோலியில் அமையவுள்ள இரும்பு ஆலை மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 4 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை பெறுவார்கள். இந்த இரும்பு ஆலையின் 2-வது கட்ட பணிகள் முடியும் பட்சத்தில் மேலும் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

நக்சலைட்டுகள் செயல்பாடு

கட்சிரோலியில் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக நக்சலைட்டுகளின் செயல்பாடுகள் கணிசமாக குறைந்துள்ளது. மேலும் நக்சலைட்டு இல்லாத மாவட்டமாக கட்சிரோலியை மாற்ற மாநில அரசு உறுதியாக உள்ளது. இதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்கும். மாநில அரசின் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி அளித்து வருகிறது. ஆனால் முந்தைய உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசு ஆணவப்போக்கு காரணமாக நிதி உதவியை பெற மத்திய அரசை அணுகவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

நாடு முன்னேற்றம்

நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்-மந்திரி அஜித்பவார், " பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு வேகமாக முன்னேறி வருகிறது. அவரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான தொலைநோக்கு பார்வையை ஆதரிப்பதற்காகவே தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் இணைந்துள்ளனர்" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்