'நீட்' தேர்வுக்கு படித்த லாத்தூர் மாணவன், ராஜஸ்தானில் தற்கொலை; நன்றாக படிக்க கூடியவர் என உறவினர்கள் வேதனை
நீட் தேர்வுக்கு படித்த லாத்தூர் மாணவன் ராஜஸ்தானில் தற்கொலை செய்து கொண்டார். அவர் நன்றாக படிக்க கூடியவர் என உறவினர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.;
மும்பை,
நீட் தேர்வுக்கு படித்த லாத்தூர் மாணவன் ராஜஸ்தானில் தற்கொலை செய்து கொண்டார். அவர் நன்றாக படிக்க கூடியவர் என உறவினர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.
லாத்தூர் மாணவன் தற்கொலை
மராட்டிய மாநிலம் லாத்தூர் அகமத்பூர் தாலுகா பகுதியில் உள்ள உஜானா கிராமத்தை சேர்ந்தவர் அவிஷ்கர் காஸ்லே(வயது17). மாணவனின் தந்தை சம்பாஜி தொடகா கிராமத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளி பொறுப்பாளராக உள்ளார். தாய் அரசு ஊழியர். மாணவன் அவிஷ்கர் காஸ்லே நீட் தேர்வு பயிற்சிக்காக ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு சென்றார். மாணவன் ஜவகர்நகர் பகுதியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார். கோட்டா, தல்வந்திநகர் பகுதியில் தாத்தா, பாட்டியுடன் வீடு எடுத்து தங்கி இருந்தார். அவிஷ்கர் காஸ்லே நேற்று முன்தினம் பயிற்சி மையத்தில் நடந்த நீட் மாதிரி தேர்வை எழுதினார். தேர்வு முடிந்த பிறகு அவர் திடீரென, பயிற்சி மையத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
22 பேர் தற்கொலை
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு ஆண்டுதோறும் நீட், ஜே.இ.இ. போன்ற போட்டி தேர்வுகளை எழுத பயிற்சி பெறுவதற்காக 2 லட்சம் மாணவர்கள் வருவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவிஷ்கர் காஸ்லே தவிர நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த வேறு ஒரு மாணவரும் தற்கொலை செய்து கொண்டு உள்ளார். 2 மாணவா்கள் ஒரே நாளில் தற்கொலை செய்ததை அடுத்து, மாணவர்களை மனரீதியாக பலப்படுத்தும் வகையில், கோட்டாவில் உள்ள பயிற்சி மையங்கள் 2 மாதங்களுக்கு மாணவர்களுக்கு தேர்வு எதுவும் நடத்த வேண்டாம் என மாவட்ட கலெக்டர் ஒ.பி. புன்கர் உத்தரவிட்டுள்ளார். 2023-ம் ஆண்டில் மட்டும் கோட்டாவில் நீட், ஜே.இ.இ. போன்ற போட்டி தேர்வுக்கு தயாராகி வந்த 22 மாணவர்கள் தற்கொலை செய்து உள்ளனர்.
நன்றாக படிப்பார்
இதற்கிடையே தற்கொலை செய்து கொண்ட மாணவர் அவிஷ்கர் காஸ்லே நன்றாக படிக்க கூடிய மாணவர் என உறவினர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து மாணவரின் உறவினர் ஒருவர் கூறுகையில், "அவிஷ்கர் காஸ்லேவின் அண்ணனும் கோட்டா பயிற்சி மையத்தில் தான் படித்தார். தற்போது அவர் என்ஜினீயரிங் படிக்கிறார். அவிஷ்கர் காஸ்லே மிகவும் நன்றாக படிக்க கூடிய புத்திசாலி மாணவன். அண்ணனை போல படித்து நல்ல கல்வி நிறுவனத்தில் சேர அவரும் கோட்டா சென்றார்" என்றார்.