கட்டுமான அதிபரை கடத்தி ரூ.1¼ லட்சம் பறிப்பு - பெண் உள்பட 6 பேருக்கு வலைவீச்சு

கட்டுமான அதிபரை கடத்தி ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள், பணத்தை பறித்து சென்ற பெண் உள்பட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-07-01 19:15 GMT

தானே, 

கட்டுமான அதிபரை கடத்தி ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள், பணத்தை பறித்து சென்ற பெண் உள்பட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடத்தல்

தானே மாவட்டம் சாகாப்பூரை சேர்ந்த 45 வயது கட்டுமான அதிபருக்கு, சமீபத்தில் பெண் ஒருவர் போன் மூலம் அறிமுகமானார். அந்த பெண்ணின் காதல் பேச்சில் தொழிலதிபர் மயங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி தொழிலதிபரை தொடர்புகொண்ட அந்த பெண் அருகில் உள்ள ரெயில் நிலையத்திற்கு வந்து தன்னை சந்திக்குமாறு தெரிவித்தார். போனில் பேசிய பெண்ணை நேரில் சந்திக்கும் ஆர்வத்தில் தொழிலதிபர் வேகவேகமாக அங்கு சென்றார். அப்போது அந்த பெண் அங்கிருந்த கார் ஒன்றில் ஏறுமாறு அவரிடம் தெரிவித்தார். நடக்க இருக்கும் விபரீதம் அரியாமல் காரில் ஏறிய அவரை அந்த பெண் உள்பட 6 பேர் சேர்ந்து வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர்.

பணம், பொருட்கள் பறிப்பு

உம்பர்மாலியில் உள்ள ஓட்டலுக்கு கடத்தி சென்ற அவர்கள், அங்குவைத்து கட்டுமான அதிபரை கடுமையாக தாக்கியும், துப்பாக்கியை காட்டி மிரட்டியும் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள தங்க சங்கிலி, செல்போன், மணிபர்சை போன்றவற்றை பறித்து கொண்டனர். பின்னர் அவரை காரில் கொண்டுசென்று நடுரோட்டில் இறக்கி விட்டு தப்பி சென்றனர். படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொழிலதிபருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த புகாரின் பேரில் பெண் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்