தமிழ் அமைப்புகள் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா - இன்று நடக்கிறது

மும்பையில் தமிழ் அமைப்புகள் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா இன்று நடக்கிறது.

Update: 2023-07-14 19:45 GMT

மும்பை, 

மும்பையில் தமிழ் அமைப்புகள் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா இன்று நடக்கிறது.

காமராஜர் பிறந்தநாள்

பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா மும்பையில் உள்ள தமிழ் அமைப்புகள் சார்பில் இன்று (சனிக்கிழமை) வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. காமராஜர் பிறந்தநாளையொட்டி பல்வேறு தமிழ் அமைப்பினர் தாராவி காமராஜர் பள்ளியில் அமைந்து உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். பம்பாய் நாடார் சங்கம் சார்பில் இன்று காலை பாண்டுப்பில் உள்ள சங்க அலுவலகத்தில் தலைவர் ஜனா ராஜா இளங்கோ நாடார் தலைமையில் காமராஜரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது. மேலும் காலாப்பூர் பகுதியில் உள்ள கிராமத்தில் பழங்குடியின மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. சயான் கோலிவாடா நாடார் வியாபாரிகள் நல்வாழ்வு சங்கம் சார்பில் சங்க அலுவலகத்தில் காமராஜா் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. மதியம் 1 மணியளவில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தலைவர் ஜெகநாதன் நாடார், செயலாளர் பொன்ராஜ் நாடார், துணை தலைவர் ரவி நாடார் செய்து உள்ளனர்.

படத்துக்கு மரியாதை

மும்பை காங்கிரஸ் தென்னிந்திய பிரிவு தலைவர் அருணாச்சலம் சார்பில் காலை 10 மணிக்கு தாராவி 90 அடி சாலையில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் காமராஜர் உருவ படத்துக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. இதேபோல நாடார் வர்த்தக சங்கம் சார்பில் சங்க பணிமனையில் நிர்வாகிகள் காமராஜர் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர். செம்பூர் காமராஜர் சாலை பகுதியில் உள்ள மார்க்கெட்டில் காலை 10 மணியளவில் காமராஜர் உருவ படத்துக்கு மாலை மணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதில் செல்காலனி பா.ஜனதா பிரமுகர் நித்திய கஜேந்திரன் நாடார் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். காமராஜர் பிறந்தநாளையொட்டி செம்பூர் திலக்நகர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் அருகில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு இடங்களில் தமிழ் அமைப்புகள் சார்பில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்