அமெரிக்கா, சீனா, ஜப்பானில் பொருளாதார நெருக்கடி- ஜே.பி. நட்டா பேச்சு
கொரோனா காலத்தில் இலவசங்களுக்கு செலவு செய்ததால் அமெரிக்கா, சீனா, ஜப்பானில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜே.பி. நட்டா பேசினார்.;
மும்பை,
கொரோனா காலத்தில் இலவசங்களுக்கு செலவு செய்ததால் அமெரிக்கா, சீனா, ஜப்பானில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜே.பி. நட்டா பேசினார்.
மும்பை வருகை
பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மும்பை வந்தார். மத்திய அரசின் திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஜே.பி.நட்டா பேசியதாவது:-
இலவசங்களுக்கு செலவு
அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. இதற்கு காரணம் அந்த நாடுகள் கொரோனா தொற்று காலத்தில் இலவசங்களுக்காக செலவு செய்தது தான்.அதேநேரத்தில் நமது நாட்டில் விவசாயம், உள்கட்டமைப்பு மற்றும் பிற துறைகளின் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான தொகுப்பை மத்திய அரசு கொண்டு வந்தது. பிரதமர் நரேந்திர மோடி போன்ற நல்ல தலைவர் ஆட்சியில் இருந்தது நமக்கு உதவியது.
ஊழல் அரசு
மராட்டியத்தில் முந்தைய கூட்டணி அரசு முற்றிலும் ஊழல் நிறைந்ததாக இருந்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அந்த அரசு அனைத்து நல்ல திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போட்டது. ஆனால் தற்போது ஏக்நாத் ஷிண்டே- தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.