விசாரணை கைதிகளுக்கு செல்போன் வழங்கிய விவகாரம்: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீசார் பணி இடைநீக்கம்
விசாரணை கைதிகளுக்கு செல்போன் வழங்கிய விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மும்பை,
விசாரணை கைதிகளுக்கு செல்போன் வழங்கிய விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மருத்துவ பரிசோதனை
மும்பையில் டி.எச்.எப்.எல். குழும நிர்வாகிகளான தீரஜ் வதாவன் மற்றும் கபில் வதாவன் ஆகியோர் பல கோடி ரூபாய் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் கடந்த 7 மற்றும் 9-ந் தேதிகளில் மருத்துவ பரிசோதனைக்காக ஜே.ஜே. மற்றும் கே.இ.எம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்களின் பாதுகாப்பிற்காக சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 6 போலீஸ்காரர்கள் பணியில் இருந்தனர்.
பணி இடைநீக்கம்
அப்போது அவர்களை தனியார் காரில் அமர்ந்து வீட்டு உணவு மற்றும் செல்போன், மடிக்கணினி உபயோகப்படுத்த போலீசார் அனுமதி அளித்து உள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று தனியார் சேனலில் ஒளிபரப்பானது. இதுபற்றி அறிந்த நவிமும்பை போலீஸ் கமிஷனரகம் விசாரணை கைதிகளுக்கு செல்போன், மடிக்கணினி உபயோகப்படுத்த அனுமதி அளித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு கமிஷனருக்கு பரிந்துரை அளித்தது. இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 6 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் துறை ரீதியான விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டார்.