காந்திவிலி அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் வீரரின் சகோதரி, மருமகன் பலி
காந்திவிலியில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முன்னாள் ஐ.பி.எல். கிரிக்கெட் வீரரின் சகோதரி, மருமகன் உயிரிழந்தனர். இதுபற்றி உருக்கமான தகவல்கள் தெரியவந்து உள்ளது.;
மும்பை,
காந்திவிலியில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முன்னாள் ஐ.பி.எல். கிரிக்கெட் வீரரின் சகோதரி, மருமகன் உயிரிழந்தனர். இதுபற்றி உருக்கமான தகவல்கள் தெரியவந்து உள்ளது.
கட்டிடத்தில் பயங்கர தீ
மும்பை காந்திவிலியில் 8 மாடிகளை கொண்ட வீனா சந்தூர் என்ற அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. 7 பிரிவுகளை (விங்) கொண்ட இந்த கட்டிடத்தில் 224 வீடுகள், 55 கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் மதியம் 12.15 மணியளவில் 'எப்' விங்கில் முதல் மாடியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மள, மளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. உடனடியாக அந்த வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்தபடி வெளியே ஓடிவந்தனர். மேலும் அந்த மாடியில் இருந்தவர்களும் தப்பித்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். இந்தநிலையில் தீ மேல் தளங்களுக்கும் பரவியது. குடியிருப்புவாசிகள் உயிர்பிழைக்க கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு ஓடினர். தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் கட்டிடத்தில் எரிந்த தீயை சுமார் 2 மணி நேரம் போராடி அணைத்தனா்.
கிரிக்கெட் வீராரின் சகோதரி, மருமகன் பலி
தீ விபத்தில் காயமடைந்த முன்னாள் ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர் பால் வல்தாட்டியின் சகோதரி குளோரி வல்தாட்டி(வயது45), அவரது மகன் ஜோஷ்வா ஜெம்ஸ்(8) உள்பட 5 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் குளோரி வல்தாட்டி, அவரது மகன் ஜோஷ்வா ஜெம்ஸ் ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. குளோரி வல்தாட்டி தனது கணவர் நோயல் ராபர்ட் மற்றும் குடும்பத்துடன் ஸ்காட்லாந்தில் வசித்து வந்தார். அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நோயல் ராபர்ட்டின் பெற்றோரை காண கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை வந்து உள்ளனர். தீ விபத்து நடந்தபோது அவர்கள் 4-வது மாடியில் உள்ள வீட்டில் இருந்து உள்ளனர். அப்போது நோயல் ராபர்ட் தான் பெற்றோரை கவனித்து கொள்வதாக கூறி மனைவி, மகனை வேலைக்கார பெண்களுடன் தப்பிச்செல்ல அறிவுறுத்தினார். ஆனால் அவர் படுக்கையில் இருந்த மாமானார், மாமியாருடன் பாதுகாப்புக்காக வீட்டிலேயே இருந்து இருக்கிறார்.
கரும்புகை தாக்கியதில்...
பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த குளோரி வல்தாட்டி மகன் மற்றும் வேலைக்கார பெண்களுடன் கீழ் தளம் வழியாக தப்பி செல்ல முயன்று இருக்கிறார். அப்போது குளோரி வல்தாட்டியும், அவரது மகனும் கரும்புகையை சுவாசித்ததில் மயங்கி விழுந்து, தீக்காயம் அடைந்து உயிரிழந்து உள்ளனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்ததால் நோயல் ராபர்ட் மற்றும் அவரது பெற்றோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடல்நலம் பாதிக்கப்பட்ட மாமனார், மாமியாரை பார்க்க வந்த இடத்தில் முன்னாள் ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர் பால் வல்தாட்டியின் அக்காள், மருமகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பால் வல்தாட்டி ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளுக்காக விளையாடி உள்ளார். 2011-ம் ஆண்டு நடந்த சென்னைக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் சதம் அடித்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.