புனேயில், மண் சரிந்து விழுந்ததால் கிணற்றில் புதைந்து 4 தொழிலாளர்கள் பலி; 4 நாள் போராட்டத்துக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டனர்
புனேயில் கிணறு தோண்டும் பணியின் போது மண்சரிவில் சிக்கிய 4 தொழிலாளர்கள் 4 நாள் போராட்டத்துக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டனர்.
புனே,
புனேயில் கிணறு தோண்டும் பணியின் போது மண்சரிவில் சிக்கிய 4 தொழிலாளர்கள் 4 நாள் போராட்டத்துக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டனர்.
கிணறு தோண்டும் பணி
புனேயில் இருந்து 120 கி.மீ. தொலைவில் இந்தபூர் மசோசபாவாடி கிராமத்தில் சுமார் 100 அடி ஆழத்தில் ராட்சத கிணறு தோண்டும் பணி நடந்து வந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கிணற்றின் உள்ளே சுவர் கட்டும் கட்டுமான பணியில் 4 தொழிலாளிகள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இரவு 8.30 மணி அளவில் கிணற்றின் சுவர் ஓரமாக குவிக்கப்பட்டு இருந்த மண், உள்ளே சரிந்தது. காங்கிரீட் சுற்றுசுவரும் இடிந்து உள்ளே விழுந்தது. இதனால் கிணற்றின் உள்ளே உள்வட்ட சுவர் கட்டிக்கொண்டு இருந்த சோம்நாத் லட்சுமண் (34), ஜாவித் அக்பர் (34), பரசுராம் பன்சில்லால் (30), மனோஜ் மாருதி (50) ஆகிய 4 தொழிலாளர்களும் மண்சரிவில் புதைந்தனர்.
பிணமாக மீட்பு
தகவல் அறிந்து மாநில, மாவட்ட பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடஹ்துக்கு விரைந்தனர். அவர்கள் மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். கடந்த புதன்கிழமை அதிகாலை 6 மணி முதல் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 100 அடி ஆழத்தில் தொழிலாளர்கள் சிக்கி கொண்டதால் மீட்பு பணி சவாலாக இருந்தது. இந்தநிலையில் 4-வது நாளாக நேற்று மீட்பு பணி நடந்தது. அப்போது கிணற்றில் புதைந்த 4 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். முதல் உடல் காலை நேரத்திலும், மதியம் 12.30 மணியளவில் 2 உடல்களும், அதன்பிறகு மற்றொரு உடலும் மீட்கப்பட்டது. அவர்களது உடல்கள் அழுகிய நிலையில் இருந்தது. உடல்களை பார்த்த குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் கிணறு தோண்டும் ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.