சஞ்சய் ராவத் நிரபராதி என்றால் ஏன் பயப்பட வேண்டும்- முதல்-மந்திரி ஷிண்டே கேள்வி
சஞ்சய் ராவத் நிரபராதி என்றால் ஏன் பயப்பட வேண்டும் என்று அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
மும்பை,
சஞ்சய் ராவத் நிரபராதி என்றால் ஏன் பயப்பட வேண்டும் என்று அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
அதிரடி சோதனை
சிவசேனா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத்தின் மும்பை வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது சஞ்சய் ராவத் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "எந்த ஊழலிலும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மறைந்த சிவசேனா நிறுவன தலைவர் பாலாசாகேப் பால் தாக்கரே மீது சத்தியம் செய்து கூறுகிறேன்" என தெரிவித்தார்.
இதுமட்டும் இன்றி எதிர்க்கட்சிகள் அவரின் வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
ஏன் பயப்பட வேண்டும்...
இந்த நிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து நிருபர்களிடம் கூறுகையில், "சஞ்சய் ராவத் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று அறிவித்துள்ளார். அப்படியானால், அவர் விசாரணைக்கு பயப்படுவது ஏன்? அது தொடர்ந்து நடக்கட்டும். நீங்கள் நிரபராதி என்றால் ஏன் பயம்?"
சந்தர்ப்ப சூழ்நிலையின் நிர்ப்பந்தத்தால் தான் சிவசேனா அதிருப்தி அணியில் இணைந்ததாக சிவசேனா தலைவர் அர்ஜூன் கோட்கர் கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "நாங்கள் அவரை அழைத்தோமா? அமலாக்கத்துறைக்கு பயந்து அல்லது எந்த அழுத்தத்தாலும் எங்களிடமோ அல்லது பா.ஜனதாவுக்கு வரவேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதா கருத்து
முன்னாள் மந்திரி கிரிஷ் மகாஜன் கூறுகையில், "சஞ்சய் ராவத் மறைந்த பால் தாக்கரேயின் பெயரை தேவையில்லாமல் இந்த பிரச்சினையில் எழுப்பி மத்திய அரசுக்கு எதிராக சிவசேனா தொண்டர்களை தூண்டிவிடுகிறார். அவர் எந்த தவறும் செய்யவில்லை என்றால் அவர் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவர் மக்கள், அரசு மற்றும் நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும்" என்றார்.
மற்றொரு பா.ஜனதா தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கிரித் சோமையா கூறுகையில், "சஞ்சய் ராவத் தற்போது விசாரணையில் இருக்கிறார். அவர் மீது எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. அவர் இப்போது எந்த அரசியல் சார்ந்த கருத்துகளையும் கூறக்கூடாது. அவர் ஏதேனும் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான நடவடிக்கைகளை அவர் எதிர்கொள்ள வேண்டும்" என்றார்.