அஜித்பவார் அணியில் இணைய விடுத்த அழைப்பை மறுத்துவிட்டேன் - ஏக்நாத் கட்சே

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித்பவார் அணியில் இணைய விடுக்கப்பட்ட அழைப்பை மறுத்துவிட்டதாக ஏக்நாத் கட்சே கூறினார்.

Update: 2023-09-25 19:45 GMT

மும்பை, 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித்பவார் அணியில் இணைய விடுக்கப்பட்ட அழைப்பை மறுத்துவிட்டதாக ஏக்நாத் கட்சே கூறினார்.

கட்சியில் பிளவு

பா.ஜனதா கட்சியில் 40 ஆண்டுகாலத்தை செலவிட்டவர் முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே. அந்த கட்சியின் மூத்த தலைவரான அவர், தேவேந்திர பட்னாவிசுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்தநிலையில் சமீபத்தில் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித்பவார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி அரசில் இணைந்தனர். ஏக்நாத் கட்சே தொடர்ந்து சரத்பவார் அணியிலேயே இடம்பெற்றுள்ளார். இந்தநிலையில் ஏக்நாத் கட்சே அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

அணி மாறமாட்டேன்...

அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அணியில் அங்கம் வகித்த எம்.எல்.சி. அமோல் மிட்காரியிடமிருந்து அவர்களது அணியில் இணையுமாறு எனக்கு அழைப்பு வந்தது. அவர்களுடன் இணைந்தால் அணிக்கு பக்கபலமாக இருக்கும் என்று அவர் கேட்டுக்கொண்டார். நான் சரத்பவாருக்கு விசுவாசமாக இருக்கிறேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டேன். நான் அவரை விட்டு செல்லமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பா.ஜனதா மூத்த தலைவர் கிரிஷ் மகாஜன், "ஏக்நாத் கட்சே, அஜித்பவாரின் அணியில் சேர முயற்சித்தார் என்பதை நான் அறிந்தேன். ஆனால் சரத்பவாரை விட்டு விலகவேண்டாம். அவருடன் இணைந்து இருக்கவேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்