பழம் பெரும் இந்தி நடிகை சுலோச்சனா மரணம்
பத்மஸ்ரீ விருது பெற்ற பழம்பெரும் இந்தி நடிகை சுலோச்சனா மரணம் அடைந்தார்.;
மும்பை,
பத்மஸ்ரீ விருது பெற்ற பழம்பெரும் இந்தி நடிகை சுலோச்சனா மரணம் அடைந்தார்.
நடிகை மரணம்
இந்தி, மராத்தியில் 300-க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை சுலோச்சனா. மும்பையில் வசித்து வந்த இவர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை 6 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 94. நடிகையின் உடல் இறுதி மரியாதைக்காக பிரபாதேவியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்படுகிறது. இறுதி சடங்கு இன்று மாலை 5.30 மணியளவில் தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.
பிரபலங்கள் இரங்கல்
நடிகை சுலோச்சனா 1940-க ளில் மராத்தி படங்களில் நடிக்க தொடங்கினார். பின்னர் அங்கு இருந்து இந்தி திரையுலகத்துக்கு வந்தார். அவர் இந்தியில் சுமார் 250 படங்களிலும், மராத்தியில் 50 படங்களிலும் நடித்து உள்ளார். குறிப்பாக நடிகர் சம்மி கபூர், திலீப் குமார், தேவ் ஆனந்த், வினோத் கண்ணா, ஜாக்கி ஷெராப் போன்ற முன்னணி நடிகர்களுக்கு தாயாக நடித்து உள்ளார். 1999-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்று உள்ளார். நடிகை சுலோச்சனாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.