நடிகை ஜியாகானை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் இந்தி நடிகர் சூரஜ் பஞ்சோலி விடுதலை- சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

இந்தி நடிகை ஜியாகானை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அவரது காதலனான நடிகர் சூரஜ் பஞ்சோலி விடுதலை செய்யப்பட்டார்.

Update: 2023-04-28 18:45 GMT

மும்பை, 

இந்தி நடிகை ஜியாகானை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அவரது காதலனான நடிகர் சூரஜ் பஞ்சோலி விடுதலை செய்யப்பட்டார்.

ஜியாகான் தற்கொலை

பிரபல இந்தி நடிகை ஜியா கான் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் 3-ந் தேதி மும்பை ஜுகு பகுதியில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஜியாகான் தற்கொலை செய்வதற்கு முன்பு, நடிகர் சூரஜ் பஞ்சோலியை காதலித்து வந்தார். தற்கொலைக்கு முன்பு எழுதியதாக 6 பக்க கடிதம் ஜியாகான் படுக்கை அறையிலிருந்து மீட்கப்பட்டது.

அந்த கடிதத்தின் அடிப்படையில் நடிகை ஜியாகானை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து சூரஜ் பஞ்சோலியை கைது செய்தனர். சில வாரங்களில் சூரஜ் பஞ்சோலி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சி.பி.ஐ.க்கு வழக்கு மாற்றம்

இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று கோரி ஜியாகானின் தாயார் ரபியா கான் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு மும்பை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை 10.30 மணிக்கு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது.

கூண்டில் ஏற்றப்பட்ட சூரஜ் பஞ்சோலி

ஆனால், காலையில் ஜியா கானின் தாயார் மேலும் சில ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தார். இதனால் தீர்ப்பு வழங்கப்படுவது தாமதமானது. பின்னர் தீர்ப்பு 12.30 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தீர்ப்பையொட்டி சூரஜ் பஞ்சோலி தந்தை ஆதித்யா பஞ்சோலி, தாய் ஜரினா வகாப்புடன் கோர்ட்டுக்கு வந்து இருந்தார்.

தீர்ப்பு கூறும்போது நீதிபதி ஏ.எஸ். செய்யது, சூரஜ் பஞ்சோலியை சாட்சி கூண்டுக்கு அழைத்தார். அவரின் பெயரை கேட்டார். அப்போது நடிகர் தனது பெயர் சூரஜ் என தெரிவித்தார். அதற்கு நீதிபதி முழு பெயரை கூறுங்கள் என்றார். அதன்பிறகு நடிகர் தனது பெயர், சூரஜ் ஆதித்ய பஞ்சோலி என கூறினார்.

விடுதலை

இதையடுத்து நீதிபதி தீர்ப்பை வாசித்தார். அப்போது அவர், "போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீங்கள் குற்றவாளி இல்லை என கோர்ட்டு கருதுகிறது. எனவே வழக்கில் இருந்து உங்களை விடுக்கிறோம்" என்றார். சூரஜ் தீா்ப்பை கேட்டவுடன் நீதிபதிக்கு தலைவணங்கி சாட்சி கூண்டில் இருந்து இறங்கினார். நீதிபதி ஜியா கானின் தாய், ரபியா கான் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கினார்.

தீர்ப்பு அறிவிக்கப்பட்டு சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு சூரஜ் பஞ்சோலி தாய், தந்தையுடன் கோர்ட்டு வளாகத்தில் இருந்து வெளியேறினார்.

தற்கொலை அல்ல; கொலை

தீர்ப்பு குறித்து ஜியா கானின் தாய் ரபியா கான் கூறுகையில், "நான் தொடர்ந்து போராடுவேன். இந்த தீர்ப்பு எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. இது நான் எதிர்பார்த்தது தான். இது தற்கொலைக்கு தூண்டிய வழக்கு அல்ல. இது ஒரு கொலை வழக்கு" என்றார்.

சூரஜ் பஞ்சோலியின் வக்கீல் பிரசாந்த் பாட்டீல் சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்று கூறுகையில், "தீர்ப்புக்கு முன் நீதிபதி அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்தார். ஊடகங்கள் முன் குற்றச்சாட்டுகளை கூறுவது எளிது. ஆனால் சூரஜிக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்